28 6 23
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.
சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று மதியம் 12.30 மணிக்கு பெரியார் கலையரங்கில் நடைபெற உள்ளது. பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்த விழாவில், 2021-2022-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற உள்ளனர். இதுதவிர, பெரியார் பல்கலைக்கழக துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 28 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 3 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதுகலை பாடப்பிரிவில் 28 மாணவர்களுக்கும், இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்ட சான்றிதழையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார்.
ஆளுநரிடம் பட்டங்களை பெறும் 608 மாணவர்களுடன் சேர்த்து சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இணைவு பெற்ற கலலூரிகளை சேர்ந்த 53,625 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் பயின்ற 1,076 மாணவர்களும், பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில் பயின்ற 6,415 மாணவர்களும் பட்டங்களை பெற உள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பதிவாளர் தங்கவேல், தேர்வாணையர் கதிரவன் மற்றும் பேராசிரியர்கள், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதாக இருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அமைச்சரின் பெயர் இடம்பெற்றிருந்தும் அவர் தற்போது பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார். காரணம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், சக்கரபாணி, கீதா ஜீவன், சாமிநாதன், காந்தி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். உயர்கல்வி, கூட்டுறவு, உணவு, சமூக நலன், தொழிலாளர் நலன், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தி வரும், செயல்படுத்தவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காகவே இந்த பட்டமளிப்பு விழாவை அவர் புறக்கணித்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அறிவித்திருப்பதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அதற்காக அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும், கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது .
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/minister-ponmudi-boycotted-salem-periyar-university-graduation-ceremony.html