18 6 23
உ.பி-யில் உள்ள ககோட் காவல் நிலையப் பொறுப்பாளர் அமர் சிங், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரை சிறைக்கு அனுப்பியதற்காக அவரை புலந்த்ஷாஹர் எஸ்.எஸ்,பி ஷ்லோக் குமாரால் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ஜூன் 14-ம் தேதி 28 வயது இளைஞர் செல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில், சிலர் அவரை மரத்தில் கட்டி வைத்து, அடித்து, தலையை மழித்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழங்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனாலும், முதலில் பாதிக்கப்பட்ட சாஹில் கானை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து கத்தியைக் கைப்பற்றி ஜூன் 15-ம் தேதி அவரை சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. வைர் கிராமத்தில் நடந்த சித்திரவதை வீடியோவைப் பார்த்த அவரது சகோதரி போலீசாரை அணுகிய போதிலும், அவரைத் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புலந்த்ஷாஹர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) ஷ்லோக் குமாரின் தலையீட்டின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட சௌரப் தாக்கூர், கஜேந்திரா மற்றும் தானி பண்டிட் ஆகிய மூவருக்கு எதிராக ஜூன் 17-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தாமி பண்டிட்டைப் தேடிக் கொண்டிருப்பதாகவும் சவுரப் தாக்கூர் மற்றும் கஜேந்திராவும் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவரை சிறைக்கு அனுப்பியதற்காக, ககோட் காவல் நிலையப் பொறுப்பாளர் அமர்சிங்கை, எஸ்.எஸ்.பி. ஷ்லோக் குமார் உடனடியாக பணி இடைநீக்கம் செய்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சுரேந்திர நாத் திவாரிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் எஸ்.எஸ்.பி ஷ்லோக் குமார் தெரிவித்தார்.
அப்பகுதி காவல்நிலையத்தில் சாஹிலின் சகோதரி ரூபீனா (25) அளித்த புகாரில், தனது சகோதரர் தினக்கூலி செய்பவர். அவர் ஜூன் 14-ம் தேதி காலையில் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு வெள்ளையடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார் என்று போலீசாரிடம் கூறினார்.
“எனது சகோதரர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, எனது மொபைலில் எனது சகோதரனை மரத்தில் கட்டி வைத்து அடித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்ல கட்டாயப்படுத்திய வீடியோவைக் கண்டதும், நான் காகோட் காவல் நிலையத்திற்கு விரைந்தேன். ஆனால், போலீசார் எனது புகாரை பதிவு செய்ய மறுத்து ஜூன் 15-ம் தேதி என் சகோதரனை கைது செய்தனர்.” என்று கூறினார்.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி சனிக்கிழமை பதிவிட்ட ஒரு ட்வீட்டில் இந்த வைரல் வீடியோவை வெளியிட்டு, “தினக் கூலி வேலை செய்பவரை மரத்தில் கட்டி வைத்து அடித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இதற்கு நடவடிக்கை எடுக்காமல், காவல்துறையின் அக்கறையின்மை அப்படிப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் சாஹில் சிறைக்கு அனுப்பப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து நாங்கள் எங்கு சென்று புகார் அளிக்க வேண்டும்?” என்று ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/uttar-pradesh-bulandshahr-man-tied-to-tree-beaten-up-head-tonsured-jai-shree-ram-699407/