புதன், 28 ஜூன், 2023

6 மாதத்திற்கு பிறகு மத்தியில் அரசு இருக்காது – மம்தா பானர்ஜி!

 28 6 23

பாஜக தலைமையிலான அரசு அடுத்த 6 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கும் என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ம் தேதி உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள உள்ள நிலையில், வேட்புமனு தாக்கலின்போதே வன்முறை தொடங்கியது. இந்த வன்முறையில் காங்கிரஸ், இடதுசாரி வேட்பாளா்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். இந்த செயலுக்கு மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ்தான் காரணம் என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையடுத்து, மத்திய படை பாதுகாப்புடன் தோ்தலை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், இதனை மம்தா ஏற்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று எல்லையோர கிராம மக்களை பிஎஸ்எஃப் வீரா்கள் மிரட்டி வருவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினாா். ஆனால், இந்த குற்றச்சாட்டை பிஎஸ்எஃப் மறுத்துவிட்டது.

இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளாட்சித் தோ்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“தோ்தல் பாதுகாப்பு விஷயத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். ஏனெனில், எதிா்காலத்தில் மத்தியில் பாஜக ஆட்சி இல்லாமல் போகலாம். அடுத்த மக்களவைத் தோ்தல் வரும் பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, பாஜக தலைமையிலான மத்திய அரசு அடுத்த 6 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கும். தோ்தலில் தோல்வியடைவோம் என்பதை ஏற்கெனவே பாஜக உணா்ந்துவிட்டது. எனவே, பல்வேறு தரப்பினருக்கு இடையே மறைமுகமாக ஆதரவு திரட்டும் நடவடிக்கையை பாஜக இப்போது மேற்கொள்ளவில்லை.

மேற்கு வங்க எல்லைப் பகுதியில் பிஎஸ்எஃப் வீரா்களின் தாக்குதலில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் வழங்கப்படும். இது தொடா்பாக பிஎஸ்எஃப்-பில் பணியாற்றும் அனைவரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. அவா்கள் எல்லையைப் பாதுகாக்கிறாா்கள். அதே நேரத்தில் நாளை பாஜக ஆட்சியில் இல்லாமல் போகலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.


source https://news7tamil.live/after-6-months-there-will-be-no-bjp-at-the-center-mamata-banerjee.html