செவ்வாய், 27 ஜூன், 2023

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் வைத்திருந்த பதாகை அகற்றம்; தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு

 

Chidambaram Nataraja temple kanaga saba
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் இருந்த பதாகையை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து அறநிலையத்துறையினர் அகற்றினர். (படங்கள்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி)

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தீட்சிதர்கள் வைத்திருந்து பதாகை போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றப்பட்ட நிலையில், தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பொதுமக்கள் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் வழிபட தடை விதித்துள்ளதாக கோவில் தீட்சதர்கள் கனகசபை வாயிலில் அருகே பதாகை வைத்தனர். இது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது என கடந்த 24 ஆம் தேதி இந்து சமய அறநிலை துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பாதகையை அகற்ற சென்றனர். அப்போது அவர்களுக்கு காவல்துறை சார்பில் சரியான பாதுகாப்பு இல்லாததால் கோவில் தீட்சிதர்கள், செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் செயல் அலுவலர், கூச்சலை சமாளிக்க முடியாமல் கோவிலில் இருந்து திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து செயல் அலுவலர் சரண்யா, பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று கோவில் தரிசன விழா முடிந்து சுவாமிகள் சித் சபைக்கு சென்ற பின்னர், மாலை கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் சந்திரன், சிதம்பரம் உதவி ஆட்சியர் (பொறுப்பு) பூமா, ஏ.எஸ்.பி ரகுபதி மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கொண்ட குழு 100க்கும் மேற்பட்ட போலீஸாருடன் அதிரடியாக சென்று கனசபையில் (சிற்றம்பல மேடை) தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகையை அகற்றினர்.

பின்னர், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதாகையை இந்து அறநிலையத்துறையினர் அகற்றிய பின்னரும் இதுவரை பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்றனர். இதனை தடுத்த தீட்சிதர்கள் கனகசபை கதவை உட்பக்கமாக பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தீட்சிதர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிதம்பரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில், பதாகையை அகற்ற சென்ற அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அறநிலையத்துறை அதிகாரி சரண்யா அளித்த புகாரின் கீழ் தீட்சிதர்கள் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

க.சண்முகவடிவேல்

26 6 23


source https://tamil.indianexpress.com/tamilnadu/chidambaram-police-case-against-nataraja-temple-thikshidars-for-kanaga-saba-issue-707225/