திங்கள், 19 ஜூன், 2023

அவதூறாக பேசியவரை உடனடியாக கண்டித்த திமுக எம்.பி. செந்தில்குமார்!

 18 6 23


தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை, அதே கட்சியை சேர்ந்த எம்.பி செந்தில்குமார் உடனடியாக கண்டித்தது கவனம் பெற்றுள்ளது.

நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை திமுகவின் மூன்றாம் கட்ட பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியுள்ளார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுகவை சேர்ந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பெண்களை பற்றி தவறாக யார் பேசினாலும் அது மிகவும் கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எந்த கட்சியினை சார்ந்தவர்களாக ஆக இருந்தாலும் சரி என தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இதனிடையே சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கண்டித்து குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய குஷ்பூ “திமுகவின் மூன்றாம் கட்ட  பேச்சாளர் என்னை பற்றி கேவலமாக, தரை குறைவாக பேசியுள்ளார். பெண்களை அசிங்கப்படுத்துவதும், கேவலமாக பேசுவதும் புது திராவிட மாடல் என்று நான் புரிந்து கொள்கிறேன். ஒரு மகளிர் ஆணைய உறுப்பினராக நான் இருக்கும் என்னை பற்றியே கேவலமாக பேசும்போது, போனால் போகட்டும் என்று விட்டு விட்டால், நம்ம நாட்டில் உள்ள மற்ற பொண்ணுங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

செந்தில் பாலாஜியை பற்றி திசை திருப்புவதற்காகவே இது போன்ற பேச்சுகளை தீனி போட்டு இவர்கள் வளர்க்கிறார்கள். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கிருஷ்ணமூர்த்தி ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. இது போன்ற  பேச்சுக்களை பேசி திமுக கட்சியின் தலைவர் கலைஞரை அசிங்கப்படுத்துகிறார்கள்.” என மிக ஆவேசமாக பேட்டியளித்தார்.

இதனை தொடர்ந்து திமுகவின் பொதுச் செயலாளார் துரை முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “ கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் கழக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/the-dmk-mp-immediately-reprimanded-the-person-who-spoke-slanderously-about-khushbu-senthil-kumar.html