வியாழன், 22 ஜூன், 2023

கருப்புக்கொடி அச்சத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

 22 6 23

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா இன்று நடைபெற்றது. இதனை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் புதுவை வழியாக நேற்று இரவு 7.45 மணிக்கு சிதம்பரம் வந்தார். அவரை கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் பதிவாளர் சிங்காரவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நேற்று இரவு அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் கவர்னர் தங்கினார்.

இன்று (புதன்கிழமை) காலை அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் உலக யோகா தின விழா நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு யோகா செய்து தொடங்கி வைத்தார். கவர்னர் மனைவி லட்சுமி ரவியும் பங்கேற்று யோகா செய்தார்.


மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் கவர்னர் ஓய்வு எடுத்தார்.

புதன்கிழமை மதியம் 3.30 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வள்ளலார் பிறந்த மருதூர் கிராமத்துக்கு செல்கிறார். அதனை தொடர்ந்து வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது இல்லத்தை பார்வையிடுகிறார்.

அதன் பின்னர் வடலூரில் அமைந்துள்ள சத்ய ஞான சபைக்கு செல்லும் கவர்னர் அங்கு நடைபெறும் வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார். அதன் பின்னர் காரில் புறப்பட்டு கடலூர், புதுவை வழியாக சென்னை செல்கிறார்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மதிமுக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ள சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்ட விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் திட்டமிட்டுள்ளதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செய்தி: க. சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/governor-rn-ravi-yoga-day-chidambaram-annamalai-university/