திங்கள், 19 ஜூன், 2023

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம்

 19 6 23

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் கனமழை பெய்தது, இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

விடிய விடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் முறையே 137 மிமீ மற்றும் 67 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Chennai Rains

பிராட்வே, பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேனி, பெரம்பூர், அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் அலுவலகம் செல்வோர், மாணவ, மாணவியர் மற்றும் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சுழற்சி தற்போது, கடல் மட்டத்தில் இருந்து 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் காணப்படுகிறது.

ஜூன் 19 முதல் ஜூன் 22 வரை தென் தீபகற்பம் மற்றும் கிழக்கிந்தியாவின் மேலும் சில பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாகி வருகின்றன.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1146 கன அடியாக உள்ளது; மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடியில் 2403 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது!

ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையில் புழல் ஏரியில் நீர்இருப்பு 2178 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 200 கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 428 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீர் தேவைக்காக 200 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது 

கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 425 மில்லியன் கனஅடியாக உள்ளது; சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 21 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-rain-orange-alert-for-chennai-and-neighboring-districts-699767/