வியாழன், 29 ஜூன், 2023

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இன்று செல்கிறார் ராகுல் காந்தி

 29 6 23

கலவரத்தால் மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில்,  ராகுல் காந்தி இன்று அங்கு செல்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்களுக்கு சலுகைகள் பாதிக்கப்படும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் வெடித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 350 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இரு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று செல்கிறார்.இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லும் ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்த நிலையில், ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார்.


source https://news7tamil.live/rahul-gandhi-will-visit-the-violence-hit-state-of-manipur-today.html