ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஜல்லிக்கட்டு நடத்துவது செல்லும் எனத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழக அரசின் வழக்கறிஞர்கள் வாதாடி பெற்று தந்தமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஜல்லிக்கட்டு பேரவைகளின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் அருகே நேற்று (ஜுன் 18) மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பேசுகையில், “ஜல்லிக்கட்டினை நடத்த விடாமல் ஒரு கும்பல் போராடியது. ஆனால் தமிழர்களின் அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதற்கு நீங்கள் நடத்திய போராட்டம் தான் காரணம் என அனைவரும் அறிவார்கள். தமிழகத்தில் பாசிச கட்சி அரசியலில் ஜல்லிக்கட்டை புதிதாக தொடங்கியிருக்கிறார்கள். அந்த ஆட்டத்தை கூட அவர்களால் நேர்மையாக ஆடமுடியவில்லை. பின்வாசல் வழியாக வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் நுழைய பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.கவின் கிளை கழகமாக அ.தி.மு.க மாறிவிட்டது. மத்திய அரசின் அடக்குமுறையை கண்டு தி.மு.க என்றும் பயந்தது கிடையாது.
எதிர்க்கட்சி தலைவர்களிடம் மட்டுமே விசாரணை
பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு தொண்டர் படை இருக்கும். பா.ஜ.கவின் தொண்டர் படையாக ஐ.டி, இ.டி உள்ளது. தேர்தல் நேரத்தில் தான் வருவார்கள். அப்போது தான் எதிர்கட்சிகளை பயப்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். 2014-ல் மோடி அரசு அமைந்த பிறகு 121 அரசியல் தலைவர்களை அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது. அதில் 115 பேர் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள். இதில் இருந்து, அமலாக்கத் துறை எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேர விசாரணை நடத்தியுள்ளனர். உண்ண விடாமல், கழிவறைக்கு செல்ல விடாமல் துன்புறுத்தியுள்ளனர்” என்றார்.
மேலும் பேசிய அவர், “அதானி என்று ஒருவர் உள்ளார். கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரதமர் மோடியின் மிக நெருக்கிய நண்பர். மோடி வெளிநாடு செல்லும் போது அதானி இல்லாமல் செல்ல மாட்டார். அதானி விமானத்தில் தான் போவார். அவருடன் சென்று அதானிக்கு முதலீடுகளை பெற்று தருவார். இதை எல்லாம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி கேட்டதற்கு அவரின் பதவி பறிக்கப்பட்டது. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் இ.டிக்கும் பயப்பட மாட்டோம். இது தி.மு.கவிற்கு புதிதல்ல” என்று கூறினார்.
19 6 2023 source https://tamil.indianexpress.com/tamilnadu/we-will-not-afraid-of-pm-modi-and-ed-udhayanidhi-stalin-on-senthil-balaji-arrest-699769/