காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் இன்று நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்.
தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், 2016ஆம் ஆண்டு வறட்சி காலத்தில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 22 நாள்களாக திருச்சி அண்ணா சிலை முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பசவராஜ் பொம்மைக்கு எதிர்ப்பு
இவர்கள் ஒவ்வொரு நாளும் தூக்கு மாட்டி போராட்டம், எலி திண்ணும் போராட்டம், தலையில் கருப்பு துணி கட்டும் போராட்டம் என பல வகையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் கே என் நேருவும், இவர்களை நேரில் சந்தித்து பேசினார். ஆனால் அமைச்சர் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில், இன்று (ஆக.18) 23-வது நாளாக கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து திருச்சி முக்கொம்பு பகுதியில் மண்ணுக்குள் புதைந்து நூதனமான முறையில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அய்யாக்கண்ணு பேட்டி
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, “கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்று கூறியுள்ளார்.
இதனையும் மீறி திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது மட்டும் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் கூறி இருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து, “காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து பெரிதா? அல்லது பசவராஜின் வார்த்தைகள் பெரிதா? எனவும் கேள்வியெழுப்பினார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/farmers-protest-by-burying-themselves-in-the-soil-in-trichy-740511/