மக்களவையில் ஜூலை 26-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட யூனியன் பிரதேசம் தொடர்பான நான்கு மசோதாக்களில், அரசியலமைப்பு (ஜம்மு காஷ்மீர்) பட்டியல் பழங்குடியினர் ஆணை (திருத்தம்) மசோதா, 2023 ஒன்று.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்தா பிராமணர், கோலி, பத்தாரி பழங்குடியினர, பஹாரி இனக்குழுவினர் ஆகிய 4 சமூகங்களை பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவு பட்டியலில் சேர்க்க அரசாங்கம் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது.
மக்களவையில் ஜூலை 26-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட யூனியன் பிரதேசம் தொடர்பான நான்கு மசோதாக்களில் அரசியலமைப்பு (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பட்டியல் பழங்குடியினர் ஆணை (திருத்தம்) மசோதா, 2023 ஒன்று.
தற்போது எஸ்டி சமூகங்கள்
ஜம்மு காஷ்மீரில் ஆதிக்கம் செலுத்தும் பட்டியல் பழங்குடி (எஸ்டி) சமூகங்கள் குஜ்ஜர்கள், பேக்கர்வால்கள் மக்கள் முக்கியமாக ரஜோரி, பூஞ்ச், ரியாசி, கிஷ்த்வார், அனந்த்நாக், பந்திபோரா, கந்தர்பால், குப்வாரா மாவட்டங்களில் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர், குறிப்பாக பேக்கர்வால்கள், நாடோடி சமூகமாக உள்ளனர் – அவர்கள் தங்கள் கால்நடைகளுடன் கோடையில் அதிக பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே திரும்பிவிடுவார்கள்.
ஏறக்குறைய 18 லட்சம் மக்கள்தொகையுடன், ஜம்மு காஷ்மீரில் காஷ்மீரிகள் மற்றும் டோக்ராக்களுக்கு அடுத்தபடியாக குஜ்ஜர்-பேக்கர்வால்கள் மூன்றாவது பெரிய குழுவாக உள்ளனர். காத்திஸ் மற்றும் சிப்பிஸ் ஆகிய இரண்டு சிறிய குழுக்களுடன் 1991-ல் அவர்களுக்கு எஸ்டி பிரிவு அந்தஸ்து வழங்கப்பட்டது. இது இந்த 5 சமூகங்களுக்கும் அரசு வேலைகளில் 10% இடஒதுக்கீடு, கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு உரிமையளித்தது; 2019-ம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் அவர்களுக்கு 10% ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்த பிறகு, அவர்கள் அரசியல் ரீதியாக அதிகாரம் பெற்றனர்.
எஸ்டி பட்டியலில் முன்மொழியப்பட்ட விரிவாக்கம் குஜ்ஜார்-பேக்கர்வால் மத்தியில் அமைதியின்மையைத் தூண்டியுள்ளது. அவர்கள் இட ஒதுக்கீட்டுப் பலன்களில் தங்கள் பங்கு சுருங்குவதைப் பார்க்கிறார்கள். இந்தச் சட்டத் திருத்தம், கூறப்பட்ட [நான்கு] சமூகங்களைச் சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நன்மைகள் காரணமாக கூடுதல் செலவினங்களை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறது.
குஜ்ஜார்-பக்கர்வால் தலைவர்கள் குறிப்பாக பஹாரிகள் மற்றும் பத்தாரிகளுக்கு முன்மொழியப்பட்ட எஸ்டி அந்தஸ்து குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கத்தா பிராமணர்களும் கோலிகளும் மிகச் சிறிய சமூகங்கள்; போராட்டக்காரர்களின் கருத்துப்படி, கத்தா பிராமணர்கள் காத்திகளின் ஒரு பிரிவு ஆகும். அதே நேரத்தில் கோலிகள் சிப்பி சமூகத்தின் துணை சாடி – இந்த இரண்டு சமூகங்களும் ஏற்கனவே எஸ்டி பட்டியலில் உள்ளன.
பஹாரி இனக்குழு
பஹாரிகள் இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்களாக உள்ளனர். அதில், ரஜௌரி, பூஞ்ச் மாவட்டங்களில் ஒரு காலத்தில் குடியேறிய காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பஹாரிகளில் உயர் சாதி இந்துக்கள் உள்ளனர்; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.
1989-ம் ஆண்டில், ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசாங்கம், குஜ்ஜார், பேக்கர்வால்கள், காத்திகள், மற்றும் சிப்பிகள் ஆகியோருடன் பஹாரிகளையும் எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும், இந்தியப் பதிவாளர் ஜெனரலால் அதன் பதிவேடுகளில் அந்தப் பெயரில் சாதி/பழங்குடி எதுவும் இல்லை என்று கூறி அந்தப் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.
ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பஹாரி மக்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் – அவர்கள் குஜ்ஜார்-பேகர்வால்கள் வாழ்ந்த அதே பகுதிகளில் வாழ்ந்து, சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருப்பதாக வாதிட்டனர் – ஃபரூக் அப்துல்லா அரசாங்கம் பஹாரி பேசும் மக்களின் வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழுவை அமைத்தது. எஸ்டி இனத்தவர் தவிர, ரஜோரி, பூஞ்ச் ஆகிய இடங்களில் வாழும் அனைத்து மக்களும் பஹாரிகள் என வாரியம் வரையறுத்தது.
பஹாரிகள் எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் எனக் கோரி தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததால் ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்திடம் இருந்து மத்திய அரசு பலமுறை விளக்கம் கேட்டது. 2012-13-ல், ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமின் பீர்சாடா தலைமையில் ஒரு ஆய்வு ஆணையத்தை நியமித்தது. அதன் அறிக்கை பஹாரிகளின் கோரிக்கையை ஆதரித்தது. மெகபூபா முப்தி தலைமையிலான பி.டி.பி-பா.ஜ.க அரசு அதன் ஆதரவுப் பரிந்துரையுடன் அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியது; இருப்பினும், பஹாரிகள் ஒரு இனக்குழு அல்ல என்ற அடிப்படையில் இந்த விவகாரம் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
முன்னதாக 2014-ம் ஆண்டில், உமர் அப்துல்லா அரசாங்கம் பஹாரிகளுக்கு 5% இடஒதுக்கீட்டை முன்மொழிந்து ஒரு மசோதாவைக் கொண்டுவந்தது. ஆனால், ஆளுநர் என்.என். வோஹ்ரா மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
சத்ய பால் மாலிக் ஆளுநராக இருந்தபோது 2019-ல் பஹாரிகளுக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் 4% இட ஒதுக்கீடு கிடைத்தது. 2019-ம் ஆண்டில், சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களை அடையாளம் காண ஓய்வபெற்ற நீதிபதி ஜி.டி. சர்மா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையில் கத்தா பிராமணர்கள், கோலிகள், பதாரி பழங்குடியினர் மற்றும் பஹாரி இனக்குழுக்களுக்கு எஸ்டி அந்தஸ்தை அளிக்க பரிந்துரைத்தது. இந்த அறிக்கை பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது, பதிவாளர் ஜெனரல் 2022-ல் ஒப்புதல் அளித்தார்.
பத்தாரி பழங்குடிகள்
பத்தாரிகள் மலைப்பாங்கான கிஷ்த்வார் மாவட்டத்தின் தொலைதூர பத்தார் பகுதியில் வசிக்கின்றனர். இரண்டு தெஹ்சில்களில் பரவி உள்ளனர். பத்தாரிகளின் தாயகம் வடக்கு மற்றும் கிழக்கில் ஜன்ஸ்கர் (லடாக்) ஆகும். தெற்கில் ஹிமாச்சல பிரதேசத்தில் பாங்கி மற்றும் மேற்கில் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் எல்லை வரை பரவி உள்ளனர்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 83.6% இந்துக்கள், 9.5% பௌத்தர்கள், 6.8% முஸ்லிம்கள் அடங்கிய பத்தாரி மக்கள்தொகை 21,548 ஆக உள்ளது. அப்பகுதி மக்கள், வேறு இடங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள் உட்பட, பத்தாரி மொழி பேசுகின்றனர்.
பஹாரிகளைப் போலவே, பத்தாரி பழங்குடியினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க முன்மொழியப்பட்டதை அவர்கள் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் வெவ்வேறு சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த தனிநபர்களின் கலவை என்ற வாதத்தின் அடிப்படையில் குஜ்ஜர்-பேக்கர்வால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
source https://tamil.indianexpress.com/explained/who-are-the-paharis-and-paddaris-proposed-for-st-status-in-jammu-and-kashmir-733694/