நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 370 மற்றும் 35A ஆகியவை நீக்கப்பட்டது சரியே என்று உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் நேற்று (டிச.11) மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019 திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது பேசிய திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா, ’ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை இருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கும் அது பொருந்தும் என சொன்னவர் தந்தை பெரியார்’ என்று கூறினார்.
பெரியார் பற்றி பேசியதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அப்துல்லாவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’மாநிலங்களவையில் எம்.பி. எம்.எம்.அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.
மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்.
மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-name-removed-in-parliament-records-mk-stalin-dmk-mm-abdullah-2017570