வெள்ளி, 10 மே, 2024

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

 சென்னை உள்ளிட்ட சுமார் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. அதேபோல் வெப்பத்தின் தாக்கமும் கடுமையாக இருந்து வருகிறது. இதன் விளைவாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் தருமபுரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தருமபுரியில் நிலத்தடி நீர் கிடைக்கும் சராசரி ஆழம் கடந்த ஆண்டு ஏப்ரலில் 5.78 மீட்டர் என்று இருந்த நிலையில், இந்த ஆண்டு 8.98 மீட்டர் அளவுக்கு கீழே சென்றுள்ளது.அதேபோல், நாமக்கலில் 6.15 மீட்டரிலிருந்து 9.34 மீட்டராகவும், கோவையில் 9.4 மீட்டரிலிருந்து 10.85 மீட்டராகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1 முதல் 2 மீட்டர் வரை சரிந்துள்ளன. சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர்மட்டம் 0.5 மீட்டர் குறைந்துள்ளது.


அதேசமயம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 2 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.


source https://news7tamil.live/ground-water-level-in-tamil-nadu-has-fallen-sharply-shocking-information-in-the-study.html