காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பூட்டு போடப்படும் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா வியாழக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, குறிப்பாக, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
ஆனால், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி, நடத்தை விதிகளை மீறி மத ரீதியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாக அவர் மீது எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்திலும் மோடி மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு பூட்டு போட காங்கிரஸ் விரும்புவதாகவும், காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமா் கோயிலைப் பூட்டிவிடுவாா்கள் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமா் கோயிலைப் பூட்டிவிடும் என்று பிரதமா் மோடி கூறியிருப்பது மிகப்பெரிய பொய். நீதிமன்ற தீா்ப்புகளை காங்கிரஸ் மதித்து நடக்கும் என்று பலமுறை உறுதிகூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் பல்வேறு சூழ்நிலைகளில் நீதிமன்றத் தீா்ப்பின்படி காங்கிரஸ் அரசு நடந்துள்ளது. எதிா்காலத்திலும் அது தொடரும்.
ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் நாள்தோறும் அதானி-அம்பானி பெயரைக் குறிப்பிட்டு வருகிறாா். இதனையும் மீறி அதானி- அம்பானியிடம் பணம் பெற்றுவிட்டதால் அவா்கள் பெயரைக் கூறுவதை ராகுல் நிறுத்திவிட்டாா் என்று பிரதமா் மோடி மீது குற்றம்சாட்டி வருகிறாா்.
உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப தவறான தகவல்களை அவா் பரப்புகிறாா். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் மாடுகளைத் திருடிவிடும் என்று ஓரிடத்தில் பேசுகிறாா். காங்கிரஸ் உங்கள் வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தி தங்க நகைகளை எடுத்துச் சென்றுவிடும் என்று மற்றொரு இடத்தில் கூறுகிறாா்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு முன்பு காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை பிரதமா் சரியாகப் படிக்க வேண்டும். பிரதமா் தனக்குத் தோன்றுவதையெல்லாம் குற்றச்சாட்டாக முன்வைக்கக் கூடாது. காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் இல்லாத விஷயங்களை எல்லாம் அதில் இருப்பதாக பேசக் கூடாது. தனது பதவிக்கான கண்ணியத்தை மறந்து பிரதமா் பேசி வருகிறாா் என பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.
source https://news7tamil.live/modis-claim-that-ram-temple-will-be-locked-once-congress-comes-to-power-is-a-blatant-lie-priyanka-gandhi-vadra.html