வியாழன், 9 மே, 2024

பிரதமர் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலடி!

 

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதானி, அம்பானி குறித்து காங்கிரஸ் வாய் திறக்காதது ஏன் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். 

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனையடுத்து நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே. 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆந்திராவின் 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று தெலங்கானாவில் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

“கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் அம்பானி-அதானி, அம்பானி-அதானி, அம்பானி-அதானி என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர்கள் இருவரையும் தவறாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். தெலுங்கானா பொதுமக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். அவர்கள் அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பெற்றார்கள்? கறுப்புப் பணம் எவ்வளவு பெறப்பட்டது? காங்கிரசுக்கு டெம்போக்கள் நிரம்பியதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இதற்கு ராகுல் காந்தி பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது;

“வணக்கம் பிரதமர் மோடி அவர்களே.. பயத்தில் இருக்கிறீர்களா? வழக்கமாகப் பூட்டிய அறையில்தான் அதானி, அம்பானி பெயரையெல்லாம் சொல்வீர்கள். இப்போது பொது வெளியில் பேசத் தொடங்கியுள்ளீர்கள். டெம்போவில் காசு வருவதாகப் பேசி உள்ளீர்கள். சொந்த அனுபவத்தில் பேசுகிறீர்களா? முடிந்தால் ED, CBI-ஐ ஏவி விசாரணை செய்யச் சொல்லுங்கள். நான் மீண்டும் சொல்கிறேன்… இந்த தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி எவ்வளவு பணம் கொடுத்தாரோ, அதே அளவு தொகையை காங்கிரஸ் ‘மகாலட்சுமி திட்டம், முதல் வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம்’ மூலமாக மக்களுக்கு கொடுத்து செல்வந்தர்களாக மாற்றுவோம். பாஜக 22 கோடீஸ்வரர்களை உருவாக்கியது, நாங்கள் கோடிக்கணக்கானவர்களை லட்சாதிபதிகளை உருவாக்குவோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.


source https://news7tamil.live/rahul-gandhis-response-to-prime-minister-modis-question-about-adani-ambani.html