ஹைதராபாத் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் கே. மாதவி லதா, வாக்குச் சாவடியில் இஸ்லாமிய பெண்களின் அடையாள ஆவணங்களைச் சரிபார்த்து, அவர்களின் பர்தாவை திறந்து முகத்தை காண்பிக்குமாறு கேட்கும் வீடியோ வெளியானதை அடுத்து, அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஓவைசி கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்தில் லதாவும் ஓவைசியும் மோதுகின்றனர்.
அமிர்தா வித்யாலயாவில் வாக்களித்த பிறகு பல வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற லதா, அசம்பூரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில், வாக்களிக்கக் காத்திருக்கும் பெண்களின் அடையாளங்களைச் சரிபார்க்கத் தொடங்கினார். அப்போது பர்தா அணிந்த ஒரு பெண்ணிடம் தன் முக்காட்டைத் தூக்கும்படி அவர் கேட்கும் வீடியோ வெளியானது.
அடையாள அட்டைகளை சரிபார்த்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு லதா எச்சரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாகவும், பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
லதா சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. ஏப்ரல் 17 அன்று, ஸ்ரீராம நவமி பேரணியின் போது ஒரு மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டினார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சை ஆன நிலையில், அவர் மன்னிப்பு கேட்டார்.
”என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது ஒரு முழுமையற்ற பார்வை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன், மேலும் இதுபோன்ற ஒரு வீடியோ காரணமாக, யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், நான் எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று அவர் X தளத்தில் எழுதினார்.
தெலங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அடிலாபாத், ஜாஹிராபாத், கம்மம், மஹபூபாபாத் மற்றும் நல்கொண்டா ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு அதிகமாக இருந்த நிலையில், ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் வாக்குப்பதிவு மிகவும் பின்தங்கியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/madhavi-latha-asks-muslim-women-to-lift-veil-hyderabad-lok-sabha-elections-asaduddin-owaisi-4566494