செவ்வாய், 14 மே, 2024

மும்பையை தாக்கிய புழுதிப் புயல் –

 13 5 24 


மும்பையில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழை பெய்தது. இதில் ராட்சத விளம்பர பேனர் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் மாலை 3 மணி அளவில் 40 – 50 கி.மீ வேகத்தில் கடுமையான புழுதிப் புயல் வீசியது. வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று அங்கிருந்த பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. அதன்படி நடந்த மீட்புப் பணிகளில் இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 4 பேர் உயிரிழந்தனர்.


காயங்களுடன் மீட்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

கடுமையான புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தின் விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. புழுதிப் புயலால் நகரின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதற்கிடையே, தொடர்ந்து மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


source https://news7tamil.live/dust-storm-hits-mumbai-banner-4-dead-60-people-injured.html