செவ்வாய், 14 மே, 2024

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பதவியில்

 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் ஆர்எஸ்எஸ்காரரை நியமிக்க முயற்சி நடப்பதாக திமுக மாணவர் அணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கான நேர்காணல் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் நேர்காணல் நடத்த முயல்வது ஏன்? என திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த பொறுப்பில் ஆர்எஸ்எஸ்கார்ரை நியமிக்க பாஜக துடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

“திருப்பெரும்புதூரில் இயங்கும் இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (GNIYVD) என்பது இந்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் நாடாளுமன்றச் சட்டம் எண்.35/2012ன் படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும்.

இந்நிறுவனம்,  இளைஞர் மேம்பாட்டின் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய முதுகலை கல்வித் திட்டங்களை வழங்குதல்,  இளைஞர் மேம்பாட்டின் முக்கியத் துறைகளில் முதன்மையான ஆராய்ச்சியில் ஈடுபடுதல் மற்றும் மாநில ஏஜென்சிகள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களை ஒருங்கிணைத்தல் போன்ற பன்முக செயல்பாடுகளுடன் ஒரு முக்கிய ஆதார மையமாக  செயல்படுகிறது.

இந்நிலையில்,  இந்நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிற்கு விண்ணப்பிக்க கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே விளம்பரம் வெளியிடப்பட்டது.  2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி போட்டியாளர்கள் பெயர் பட்டியலை தயாரித்து விட்டு,  நேர்காணலை நடத்தாமல் அதனை கேட்பார் அற்று கிடப்பில்
போட்டு விட்டு, சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது.

தற்போது நேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது,  இயக்குநர் பதவிக்கான நேர்காணல் வரும் மே மாதம் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  6 மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டிய நேர்காணலை தற்போது நடத்துவதன் மூலம், தகுதியுடைய புதிய போட்டியாளர்கள் பலரின் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக இது அமைகிறது.

இந்திய அரசாங்கத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் 11.01.2016 அன்றைய அலுவலகக் கடித எண். 14017/15/2015Eatt. (RR), இரண்டாம் பாராவில், “அனைத்து அமைச்சகங்களும்,  துறைகளும் தங்கள் அமைச்சகங்கள், துறைகளில் நேரடி ஆட் சேர்ப்பு முறையின் மூலம் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கும் போது விளம்பரம்,  எழுத்துத் தேர்வு நடத்துவது அல்லது நேர்காணல் நடத்துவது உள்பட முழு ஆட்சேர்ப்பு செயல்முறையும் 6 மாதங்களுக்குள் முடிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்” என்று இந்திய அரசு தெளிவுறுத்துகிறது.

அதாவது விளம்பரம் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் அப்பணியிடம் நிரப்பப்பட வேண்டும்.  இந்த நடைமுறை (ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் போன்ற) தன்னாட்சி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்தக் கடிதம் தெளிவுபடுத்துகிறது.

இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாய் விளங்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சூழலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது. மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் இயக்குநர் பதவியை நிரப்புவதற்கு திடீரென நேர்காணல் நடத்த முயல்வது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு இந்தத் தகவல் தெரியுமா? ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதா? தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுகளே சுதந்திரமாக இயங்குவதற்கு பல்வேறு நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டும் தேர்தல் ஆணையம் நேர்காணல் நடத்த அனுமதி வழங்கியிருக்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது? அல்லது  தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்றதா பாஜக அரசு? இத்தனை மாதங்களுக்குப் பிறகு நேர்காணலை நடத்த என்ன அவசியம் அவசரம்?

ஆட்சி மாறப்போகிறது என்று தெரிந்ததும்,  போவதற்குள் அவசர அவசரமாக ஓர் ஆர்எஸ்எஸ்காரரைப் பதவியில் கொண்டு வந்து அமர்த்துவதற்கான ஏற்பாடுதான் இந்த நேர்காணல் நாடகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.  அடுத்த 5 ஆண்டுகளுக்கு மறைமுகமாக இந்த நிறுவனத்தை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில்,  விதி முறைகளுக்குப் புறம்பாக ஆர்எஸ்எஸ் இறங்கி இருக்கிறது.

இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஆர்எஸ்எஸ்காரருக்கு ஒதுக்குவதற்காக இவ்வளவு அவசர அவசரமாக நேர்காணல் நடத்துவது மேற்சொன்ன இந்திய அரசின் விதிமுறைகளுக்கும், நேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் முரணானதும், வெளிப்படை தன்மையற்ற செயலாகும்.

மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர,  சர்வாதிகார அரசியலுக்கு முட்டுக்கட்டையிட, இந்தியா கூட்டணி என்ற மாபெரும் ஆற்றல் உருபெற்று,  பாசிசத்தை தூள்தூளாக்க ஏறுநடை போட்டு வருவதை அறிந்து,  ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பாஜக அரசு பயத்தில் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஆர்எஸ் என்னும் புற்று நோயையை வேகமாக பரப்பிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்து,  பாஜகவின் உதவியோடு பின்வாசல் வழியாக அதிகாரத்தை அடைய நினைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தி.மு.க மாணவர் அணி  தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் அறிவுறுத்தலின்படி, வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட 6 மாதத்திற்குள்ளாக நடத்தி முடிக்கப்பட வேண்டிய நேர்காணல் நடைமுறைகளை பின்பற்றாமல், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுகின்ற செயலாக தற்போது நடைபெற இருக்கும் இந்த நேர்காணல் உடனடியாக ரத்து செய்துவிட்டு, ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்த நபர்களை இயக்குநர் பதவியில் அமரவைப்பதில்  காட்டும் அவசரத்தை நிறுத்திக் கொண்டு, தேர்தல் நடத்தை விதிகள் நிறைவுற்ற பிறகு, நேர்மையான முறையிலும், வெளிப்படை தன்மையுடனும் புதிய அறிவிப்பினை வெளியிட்டு, ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுடன் புதிய விண்ணப்பதாரர்களின் மனுக்களையும் பெற்று, பரிசீலித்து நேர்காணலை நடத்த வேண்டுமென்று திமுக மாணவர்  அணி வலியுறுத்துகிறது’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

source https://news7tamil.live/why-interview-for-the-post-of-rgniyd-director-is-being-conducted-when-the-code-of-conduct-is-in-force-dmk-student-union-secretary-ehilarasan-question.html