கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு 10 நாள்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றது. இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது.
தொடர்ந்து இன்று (ஆக. 28) மேற்கு வங்கம் முழுவதும் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மேற்குவங்க பயிற்சி மருத்துவர் விவகாரம் அதிர்ச்சியளிப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உயிரிழந்த மருத்துவ மாணவியை நினைவுகூரும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ”முதுநிலை பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காவல் துறையிடமிருந்து சிபிஐ வழக்கைப் பெற்று 16 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும் நீதி கிடைக்கவில்லை.
மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதில் இருந்தே நான் அவர்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறேன். சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உங்கள் வலியை நான் புரிந்துகொள்கிறேன். 20 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். அடுத்தவாரம் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து, குற்றவாளிகளுக்கு 10 நாள்களுக்குள் மரண தண்டனை வழங்கும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளோம்.
இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்புவோம். அவர் மசோதாவுக்கு ஒப்புதல் தராவிட்டால், ஆளுநர் மாளிகைக்கு வெளியே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த மசோதாவை நிச்சயம் நிறைவேற்றுவோம். அவர் தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியாது” என தெரிவித்தார்.
source https://news7tamil.live/bill-to-be-filed-for-death-penalty-for-criminals-within-10-days-mamata-banerjee-action-announcement.html