புதன், 28 ஆகஸ்ட், 2024

மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதல் – 5பேர் கொல்லப்பட்டுள்ளதாக #PalestineHealthMinistry அறிவிப்பு!

 28 8 24


மேற்கு கரையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து 5பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 10மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த போருக்கு பின்னர் பல மக்கள் அகதிகள் முகாம்களை போன்று கூடாரங்கள் அமைத்து தங்கிவருகின்றனர். போருக்கு பின்பான பிரச்னைகளை பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். புதுவகையான தோல் நோயால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கூடாரங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக பாலஸ்தீன மக்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் நிகழ்த்தி வருகிறது.  வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனிடையே காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவர கடந்த வாரம் கத்தாரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் உடன்பாடு எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவுற்றது. இதனைத் தொடர்ந்து போர்நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக முனைப்பு காட்டியது.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் 9-ஆவது முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.  இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில், அந்நாட்டின் அதிபர் ஐசாக் ஹர்ஸோக் உடன் அவர் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது, காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட இதுவே கடைசி வாய்ப்பு என்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் அமெரிக்க தரப்பில் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியைத் தழுவவே பிளிங்கன் அமெரிக்கா திரும்பினார்.

இந்த நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கில் தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தாக்குதலில் ஜெனின் நகரில் இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக  பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

ஜெனின் மற்றும் துல்கர்மில் பயங்கரவாதத்தை முறியடிக்க பாதுகாப்புப் படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளோம் என இஸ்ரேல் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://news7tamil.live/palestinehealthministry-announces-israeli-airstrikes-in-west-bank-5-killed.html