தமிழக அரசு பி.எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா அபியான்) கீழ் ஆண்டுதோறும் 4 தவணையாக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
இதனையடுத்து இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ”தமிழகம் உட்பட சில மாநிலங்களில் 'சமக்ரா சிக்ஷா' திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,152 கோடியாகும் (60%). மத்திய அரசின் அந்த பங்களிப்பை பெற ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், முதல் தவணையான ரூ.573 கோடியை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
பி.எம் ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாநிலங்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை. பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
தற்போது நிதி விடுவிக்கப்படாததால் தமிழக பள்ளி கல்வித்துறையில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி இதில் நேரடியாக தலையிட வேண்டும்” என ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், ”மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கடந்த நிதியண்டில் வழங்க வேண்டிய 4 தவணை தொகையையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. நடப்பு ஆண்டில் ரூ.4,305.66 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை 2020ன் மாற்றத்தக்க பலன்களை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் குழந்தைகளுக்கு உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
'சமக்ரா சிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் .புதிய தேசிய கல்வி கொள்கை 2020 என்பது தமிழக பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை முழுமையாக ஆதரிக்கிறது. தாய்மொழி மற்றும் பன்மொழியை கற்பிப்பதில் இது உறுதியளிக்கிறது. உலகில் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவிலேயே பழமையான மொழியாகவும் தமிழ் இருக்கிறது. இது தேசிய பெருமைக்குரியது. தமிழ் மொழியைக் கற்க ஒரு பிரத்யேக சேனல் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி வழிகாட்டலில் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நாட்டில் உள்ள 14,500க்கும் அதிகமாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு கடந்த 2022 செப்டம்பர் மாதம் பி.எம் ஸ்ரீ திட்டம் தொடங்கப்பட்டது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். தற்போது 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இணைய கையெழுத்திட்டுள்ளன.
தமிழ்நாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதுதொடர்பாக நானும், கல்வித்துறை செயலாளரும் 6 கடிதம் எழுதினோம். இதையடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு ஒப்பந்தம் ஒன்றை வழங்கியது. இது மகிழ்ச்சியை தந்தது. ஆனால் அதன்பிறகு திருத்தியமைக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழங்கியது. அதன்படி தேசிய கல்வி கொள்கை தொடர்பான குறிப்புகள் கைவிடப்பட்டுள்ளது.
எனவே புதிய தேசிய கல்வி கொள்கை 2020 உடன் இணைந்த சமக்ரா சிக்ஷா அபியானை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிராந்தியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஒரு அளவுகோல் அமைக்க வழிவகை செய்யும் பி.எம் ஸ்ரீ திட்டத்தை மாநிலம் முழுவதும் ஏற்றுக்கொள்வது முக்கியம். இதனால் பி.எம் ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக கூறியது படி தமிழக அரசு கையெழுத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்” என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dharmendra-pradhan-wrote-letter-to-stalin-tamilnadu-should-sign-pm-shree-schools-scheme-6938605