வியாழன், 29 ஆகஸ்ட், 2024

வினாத்தாள் கசிந்த விவகாரம் – திரும்பப் பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு!

 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதை திரும்பப் பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் B.Ed எனப்படும் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 760 கல்வியில் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் B.Ed இரண்டாம் ஆண்டு நான்காம் பருவ தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு தேர்வுகள் நடைபெற்று உள்ள நிலையில், இன்று படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வு நடைபெறுகிறது.

70 மதிப்பெண்களுக்கு நடைபெற இருக்கும் இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே தேர்வர்களிடம் கிடைத்துவிட்டதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 29ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்க வேண்டிய தேர்வுக்கான வினாத்தாள் ஒரு நாள் முன்னதாகவே மாணவர்களுக்கு கிடைத்து விடுவதாகவும், பல்கலைக்கழக பதிவாளரும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் ஒவ்வொரு கேள்வித்தாளையும் விலைக்கு விற்று விடுவதாக கல்வியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதை திரும்பப் பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு துவங்குவதற்கு முன்பு இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. காலை 9:15 மணியளவில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அதை மாணவர்களுக்கு நகல் எடுத்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/department-of-higher-education-question-paper-tamil-nadu-bedquestionpaper.html