சனி, 17 ஆகஸ்ட், 2024

#Isreal தாக்குதலில் இரட்டைக் குழந்தைகள் , மனைவி உயிரிழப்பு – பிறப்புச் சான்றிதழ் வாங்கச் சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்!

 

Twins, wife killed in #Isreal attack - Tragedy befalls father who went to buy birth certificate!

பிறந்த நான்கு நாட்களே ஆன இரட்டை குழந்தைகள் மற்றும் மனைவியை இழந்த தந்தை பிறப்புச் சான்றிதழோடு கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடந்த 10மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த போருக்கு பின்னர் பல மக்கள் அகதிகள் முகாம்களை போன்று கூடாரங்கள் அமைத்து தங்கிவருகின்றனர். போருக்கு பின்பான பிரச்னைகளை பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். புதுவகையான தோல் நோயால் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கூடாரங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக பாலஸ்தீன மக்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

பாலஸ்தீனத்தில் பலர் தங்களது குடும்பத்தில் ஒருவரையாவது இழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் பார்த்து பலர் கண்ணீர் சிந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் போன்று ஒரு நிகழ்வுதான் தற்போது பாலஸ்தீனத்தில் நிகழ்ந்துள்ளது.

மனைவி மற்றும்  பிறந்த குழந்தையை இழந்த தந்தை ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்த முகமது அபு அல்- கும்சான் என்ற அந்த தந்தைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  தனது மனைவியும் குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள் என பெரும் நம்பிக்கையோடு வீடுதிரும்பியுள்ளார் அபு அல் கும்சான்.

ஆனால் வீடு திரும்பி பார்த்தபோது இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்ற அதிர்ச்சியே செய்தியே அவருக்கு மிஞ்சியது. மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் அபு அல் கும்சானின் மனைவி, பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல் மற்றும் அசைர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு கதறி அழும் வீடியோ பார்ப்போரை கண்கலங்க செய்கிறது.

source https://news7tamil.live/twins-wife-killed-in-isreal-attack-tragedy-befalls-father-who-went-to-buy-birth-certificate.html