மகப்பேறு விடுமுறை... பெண் காவலர்களுக்கு புதிய சலுகை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்களின் சொந்த ஊரிலேயே பணி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகளுக்கு, குடியரசு தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதல் அமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சிறப்பு காவல் படையின் மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு, மகப்பேறு விடுமுறை ஒரு ஆண்டு அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது, குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான பெண் காவலர்கள் தரப்பில் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண்களுக்கு 3 ஆண்டுகள் சொந்த ஊரில் பணி வழக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு பணி மூப்பிற்கு விளக்கு அளிக்கப்பட்டு, அவர்களின் பெற்றோர்கள் அல்லது கணவர் வீட்டை சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் பணி வழக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் க்ரைம் விசாரித்து தீர்ப்பதற்கு, பெண் காவலர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மக்களை காப்பாற்றுவது உங்கள் கடமை மற்றும் பொறுப்பு. அதை எந்த குறையும் இன்று நிறைவேற்றி தர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உங்களின் உழைப்பு தலை வணங்கத்தக்கது. அமைதியான மாநிலத்தில் தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும். இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு, பெருமைமிகு மாநிலமாக திகழ, காவல்துறையின் பங்கு முக்கியமானது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது என்று கூறியுள்ளார்.