சனி, 24 ஆகஸ்ட், 2024

கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டம்; மீண்டும் புத்துயிர் கொடுக்கும் சென்னை மாநகராட்சி

 

கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டம்; மீண்டும் புத்துயிர் கொடுக்கும் சென்னை மாநகராட்சி 23 08 24 

priya and america

கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு சென்னை மாநகராட்சிமீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது. (Image: x/ @chennaicorp)

கூவம் நதியை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு சென்னை மாநகராட்சிமீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது.

சென்னையில் ஓடும் கூவம் ஆறு 1940-கள் வரையிலும்கூட தெளிந்த நல்ல நீர் ஓடியது. சென்னையின் வளர்ச்சி ஒரு ஆற்றை கழிவுநீர் கால்வாய் ஆகிவிட்டது. இன்று கூவம் என்றால் ஆறு என்பது மறந்துபோய் கழிவுநீர் கால்வாய்க்கு உதாரணமாகவும் அடையாளமாகவும் மாறிவிட்டது.

அவ்வப்போது, கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கூவம் எப்போது ஒரு நதியாக மீட்டெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அப்படியேதான் இருக்கிறது.

கூவம் நதியை சீரமைத்து மீட்டெடுக்க, 2006-2011 திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அப்போதைய மேயர் சுப்பிரமணியன் முயற்சியில் அமெரிக்க சான் ஆண்டனியோ மாகாணத்துடன் சென்னை மாநகராட்சி நீர்நிலைகள் மீட்டெடுத்தல் தொடர்பாக சகோதர ஒப்பந்தமும் கையெழுத்தானது.

பின்னர், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சான் ஆன்டனியோ மகாணத்துக்குச் சென்ற மேயர் பிரியா சகோதர ஒப்பந்தத்தை புதுப்பித்து, பின்னர் சென்னை மாநகராட்சியுடன் திட்டங்கள் பரிமாறிக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது.

இதில், சான் ஆன்டனியோவில் உள்ள நதியை மீட்டெடுத்து சுற்றுலா தளமாக மாற்றியதை போல சென்னை கூவம் நதியை சீரமைக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக, சர்வதேச சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் அறிவியல் விவரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஜெனிபர் லிட்டில் ஜான், அமெரிக்க துணை தூதர் கிறிஸ் ஹொட்ஜாஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர்.

மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ரிப்பன் மாளிகையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து கூட்டாக இணைந்து கூவம் நதியை நேரில் பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கனவுத் திட்டமான கூவம் நதி மீட்டெடுத்தல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய நீர்நிலைகளை சீரமைத்து மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “மேயர் ஆர். பிரியா தலைமையில், பெருங்கடல்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (பொ) ஜெனிஃபர் ஆர். லிட்டில் ஜான் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹாட்ஜஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆறு கடலில் கடக்கும் இடத்தினைப் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் திரு.பொதுப்பணித்திலகம், அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க துணை தூதரகத்தின் அலுவலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.” என்று தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/the-chennai-corporation-has-revived-the-project-to-restore-the-coovam-river-6921109