செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

தமிழ்நாடு நீட் 2024 கட் ஆஃப்: எத்தனை மதிப்பெண் எடுத்தால் எம்.பி.பி.எஸ் சீட்

 

neet exam

மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வின் 2024-ம் ஆண்டுக்கான ரேங்க பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் எத்தனை மதிப்பெண்கள் எடுத்தால், எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பது குறித்து பயோலஜி சிம்பிளிஃபைடு தமிழ் (Biology Simplified Tamil) என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால் நீட் நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தாலும், ஆண்டு தோறும் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நடப்பு ஆண்டில் தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள் வெளியானதால், நீட் தேர்வு நியாயமாக நடத்தப்படவில்லை என்ற கருத்துக்கள் அதிகரித்து வந்தது.

மேலும், நடப்பு ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம், நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2024 நீட் தேர்வுக்கான ரேங்க் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், எத்தனை மதிப்பெண்கள் எடுத்தால், எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும், இடஒதுக்கீடு விபரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த பட்டியலில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் இடங்களை வைத்து பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுபிரிவினருக்கு (ஒ.சி பிரிவு)1341 இடங்கள் உள்ளது. இந்த பிரிவினர், 651 மதிப்பெண்கள் பெற்றால், அவர்களுக்கு எம்.பி.பி.எஸ் இடம் கிடைப்பது உறுதி. 604 மதிப்பெண்கள் பெற்றால், தனியார் கல்லூரியில் சீட் கிடைக்கும். இந்த மதிப்பெண் இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு எம்.பி.பி.எஸ் படிக்க சீட் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

அடுத்து பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) பிரிவினருக்கு 1009 சீட்கள் இருக்கிறது. இந்த பிரிவினர், 622 மதிப்பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைப்பது உறுதி. இந்த மதிப்பெண்ணுக்கு கீழ் இருந்தாலும் சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கும். ஆனாலும் 622 மதிப்பெண்கள் என்பது பாதுக்காப்பானதாக இருக்கும். 576 மதிப்பெண்கள் பெற்றால், தனியார் கல்லூரியில் சீட் கிடைக்கும். அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் (பி.சி.எம்) பிரிவினருக்கு 136 இடங்கள் இருக்கும் நிலையில், இந்த பிரிவினர் 615 மதிப்பெண்கள் பெற்றால் சீட் கிடைப்பது உறுதி. 571 மதிப்பெண்கள் எடுத்தால் தனியார் கல்லூரியில் சீட் கிடைக்கும்.

776 இடங்கள் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) பிரிவினர்கள் 605 மதிப்பெண்கள் பெற்றால் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும்.இந்த தகவல்கள் முதல் சுற்று கவுன்சிலிங் மட்டுமே. இதில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்திருந்தாலும் அவர்களுக்கும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த தகவல்கள் 36 அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஒரு உதவி பெறும் மருத்துவ கல்லூரிக்கு மட்டுமே பொருந்தும். 565 மதிப்பெண்கள் பெற்றால், தனியார் கல்லூரியில் சீட் கிடைக்கும்.

601 இடங்கள் உள்ள ஆதி திராவிடர் (எஸ்.சி) பிரிவினர் 538 மதிப்பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும். 513 மதிப்பெண்கள் பெற்றால், தனியார் கல்லூரியில் சீட் கிடைக்கும். 112 இடங்கள் கொண்ட ஆதி திராவிடர் அருந்ததியர் (எஸ்.சி.ஏ) பிரிவினர் 476 மதிப்பெண்கள் பெற்றாலே எம்.பி.பி.எஸ் சீ்ட் கிடைப்பது உறுதி. 446 மதிப்பெண்கள் பெற்றால், தனியார் கல்லூரியில் சீட் கிடைக்கும். 39 இடங்களை கொண்ட பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவினர், 494 மதிப்பெண்கள் பெற்றால் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கும். 429 மதிப்பெண்கள் பெற்றால், தனியார் கல்லூரியில் சீட் கிடைக்கும்.


source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-neet-exam-2024-rank-list-and-cutoff-mark-update-in-tamil-6868979