புதன், 21 ஆகஸ்ட், 2024

#TNInvestmentMeet2024 | “ரூ.68,773 கோடிக்கான திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

 

சென்னையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் ரூ.68,773 கோடிக்கான திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் எனவும், 1,06,800 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக. 21) நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று (ஆக. 20) ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது தான் நாணயமான ஆட்சி. கலைஞரின் நாணயமான ஆட்சி நடக்கிறது. அதன் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார். அதற்கு எடுத்துக்காட்டு தான் முதலீட்டு மாநாடு. அதன்படி, 2021-23 வரை உலக முதலீட்டாளர் மாநாடு, முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு தமிழகத்திற்கு ஈர்த்த முதலீடுகள், அந்த கனவெல்லாம் நனவாகி மக்களுக்கு பயன் தரும் வகையில் வேலைவாய்ப்புகளாக உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

ரூ.17,616 கோடி முதலீடுகளுக்கான துவக்க விழா நடைபெற உள்ளது. சுமார் 65 ஆயிரம் நபர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் இடப்பட்டு அனைத்தும் ஒப்புதல்களும் வழங்கப்பட்டு, நாளை ரூ.51,000 கோடி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது. ரூ.68,773 கோடிக்கான திட்டம் மூலம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் உண்டாகியுள்ளது.

கோவை விமான நிலையம் விரிவாக்கத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்த்தியுள்ளோம். விரைவில் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இடத்திற்கான நிதி செலவு செய்யாமல், 8 ஆண்டு ஆட்சியில் அப்படியே கிடந்தது. கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான திட்ட வரையறையை திரும்பு அனுப்பிருப்பது மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் மீதான அக்கறையை காட்டுகிறது.

இருப்பினும் முதலமைச்சர் கூறியதன்படி, இந்த திட்டத்தை நிறைவேற்றி காட்டுவோம் என்றார். தொழில்துறைக்கு ஏதுவான சூழலை தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியுள்ளார். எந்த இக்கட்டான சூழலை மத்திய அரசு நம் மீது திணித்தாலும் அதையெல்லாம் தகர்த்து, முதலீட்டாளர்களுக்கு ஒரு அற்புதமான சூழலை உருவாக்கி நிறுவனத்திற்கு தேவையான திறன் மிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கிறது.

இதுவரை கால் பதிக்காத மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்திற்கு வரவுள்ளன. 390 நாட்களுக்குள் ஒப்பந்தம் போடப்பட்டு நிறுவனம் அமைந்து, திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்கியுள்ளார்கள். அதுதான் முதலமைச்சருடைய சாதனை” இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார்.


source https://news7tamil.live/tninvestmentmeet2024-the-chief-minister-will-start-the-project-for-rs-68773-crore-minister-d-r-p-raja-interview.html