சனி, 17 ஆகஸ்ட், 2024

போர்க்களமாக மாறிய #Russia – 3 மாகாணங்களில் இருந்து இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தல்!

 

ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் படையினர் போர் புரிந்துவரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.

இந்த சூழலில் ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான குர்ஸுக்குள் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமார் 1,000 உக்ரைன் படையினர் சமீபத்தில் நுழைந்தனர்.  உக்ரைன் படையினர் அங்கு ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,

“சமீபத்தில் நடைபெறும் சம்பவங்களை கருத்தில்கொண்டு ரஷ்ய நகரமான பிரையன்ஸ்க், பெல்கோரோடில், குர்ஸ்க் மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இப்பகுதிகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு, இந்தியத் தூதரகத்தை தொடர்புகொள்ள விரும்புவோர் +7 965 277 3414 என்ற எண்ணையோ அல்லது edu1.moscow@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/russia-has-become-a-war-zone-indians-are-advised-to-leave.html