திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு நடைமுறைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (School Management Committee) கடந்த 2022 ஆம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து 2024-26 ஆம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 37,061 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 10, 17 ஆம் தேதிகளிலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆகஸ்ட் 24 ஆம் தேதியும் எஸ்.எம்.சி குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து இறுதிக்கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளிகளில் எஸ்.எம்.சி குழுக்கள் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 31) மறுகட்டமைப்பு செய்யப்பட இருக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் எஸ்.எம்.சி குழுக்கள் மறுகட்டமைப்பு நடைமுறைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மண்டல மாநாடு ‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் பாளையங்கோட்டையில் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 31) நடத்தப்பட உள்ளது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு அன்றைய தினம் நடத்தப்பட உள்ள பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பணிகள் தற்போது செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அதேநேரம் மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி எஸ்.எம்.சி குழுக்கள் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனுடன் எஸ்.எம்.சி குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டுமென சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/school-management-committee-restructured-procedure-postponed-4-districts-in-tamilnadu-6936353