ஆண்களின் உடலில் உள்ள இந்த Y குரோமோசோம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. இது இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் முற்றிலுமாக அழிவைச் சந்திக்கலாம்.
பாலூட்டிகளின் பாலினத்தைத் தீர்மானிப்பதில் Y குரோமோசோம்களின் பங்கு மிக முக்கியமானது. ஆனால், மனிதர்களின் உடலில் உள்ள Y குரோமோசோம்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாகவும், இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் Y குரோமோசோம் முற்றிலுமாக அழிய வாய்ப்புள்ளதாகவும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் (National Academy of Science) என்னும் நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளில்,
“பொதுவாக மனிதர்கள் மற்றும் பிற பாலினங்களில், பெண்களின் உடலில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும். ஆண்களின் உடலில் X மற்றும் Y என இரண்டு குரோமோசோம்கள் இருக்கும். ஓர் உயிரினத்தின் பாலினத்தைத் தீர்மானிப்பது Y குரோமோசோம் தான். கரு உருவாகத் தொடங்கி 12 வாரங்களில் இந்த Y குரோமோசோமின் தூண்டுதலால் ஆணுறுப்பு உருவாகத் தொடங்கி, அந்தக் கரு ஆண் என்ற பாலினத்தை அடையும். ஆண்களின் உடலில் உள்ள இந்த Y குரோமோசோம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. இது இன்னும் சில மில்லியன் ஆண்டுகளில் முற்றிலுமாக அழிவைச் சந்திக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் பாலினத்தை தீர்மானிக்கும் Y குரோமோசோம் அழிவதால், மனித இனத்தின் அழிவுக்கு அது வழிவகுக்கலாம் என்ற கவலையை, இந்த ஆய்வு முடிவு ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், ஆறுதல் அளிக்கக்கூடிய இன்னொரு தகவலையும் இது வெளியிட்டுள்ளது. அதாவது, எலி வகையைச் சார்ந்த மற்ற இரண்டு உயிரினங்கள், தங்களுடைய Y குரோமோசோம்களை பரிணாம வளர்ச்சி காரணமாக முற்றிலும் இழந்துள்ளன. ஆனால், அந்த உயிரினங்கள் இன்று வரை வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றன என்பதுதான் அந்தத் தகவல்.
கிழக்கு ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் மோல் வோல்ஸ் (Mole voles) என்னும் உயிரினமும், ஜப்பானை சேர்ந்த ஸ்பைனி ரேட் (Spiny rat) என்னும் முள்ளெலிகளும், தங்களுடைய Y குரோமோசோமை முற்றிலுமாக இழந்துவிட்டன. ஆனாலும் இந்த முள்ளெலிகள் எவ்வாறு தங்கள் பாலினத்தைத் தீர்மானிக்கின்றன என்பதும் நேஷனல் அகாடமி ஆப்ஃ சயின்ஸ் நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவு கூறுகிறது.
மோல் வோல் என்னும் எலி வகை மற்றும் ஜப்பானை சேர்ந்த முள்ளெலிகளின் உடலிலும் இந்த Y குரோமோசோம் தற்போது முற்றிலுமாக அழிந்துவிட்டது. X குரோமோசோம்கள் மட்டுமே தனியாகவோ, இணைந்தோ இவற்றின் உடலில் உள்ளன. இவை Y குரோமோசோம்கள் இல்லாமல் எப்படி பாலினத்தை தீர்மானிக்கின்றன என்பது புலப்படாத நிலையில், அதுபற்றி அறிய ஜப்பானின் ஹூகைடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அசோடோ குரைவோ (Asato Kuraiwo) என்னும் பேராசிரியர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் ஜப்பானில் உள்ள முள்ளெலிகளின் உடலில் பாலினத்தை தீர்மானிப்பதற்கான ஜீன் தற்போது இல்லவே இல்லை என்பது கண்டறியப்பட்டது. பாலினத்தை தீர்மானிப்பதற்கான ஜீன் தற்போது அந்த எலியின் உடலில் இல்லை என்றாலும் அதே போலவே சிறிய மாற்றங்களுடன் உருமாறிய மற்றொரு ஜீன் அதன் உடலில் உள்ளது. அது பாலினத்தைத் தீர்மானிக்கும் பணியைச் செய்வது கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வு தெரிவிக்கிறது.
source https://news7tamil.live/dwindling-y-chromosome-doomsday-for-the-male-race-exciting-information-in-the-study.html