அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்கள்ல் 8 மற்றும் 12 ஆவது தீர்மானங்கள் விமர்சனத்துக்கு உரியவை என்றும் அவற்றை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என்று அமைச்சர் சேகர் பாபுவுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமது துறைப் பணிகளில் தேவையான ஆர்வம் தாண்டி செய்கிறார். over enthusiastic ஆக இருக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி கூறியிருப்பதாவது: அனைத்து முத்தமிழ் முருகன் மாநாடு'' நடத்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவது பொருத்தமானதாகும். அதிலும் தற்போது மிஞ்சியது ஏமாற்றமே!
இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறந்த செயல்வீரர் என்பதால், செயல்பாபு என்றே நம் முதலமைச்சர் பாராட்டினார். அதைவிட இப்போது ஒன்றைச் சுட்டிக்காட்டுவதும் அவசியமாகும். “கோவில் துறையைப் பாதுகாக்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் இப்போது கோவிலிலேயே குடியிருக்கிறார்! என்று கூறியதன்மூலம், அவர் தனது துறைப் பணிகளில் தேவையான ஆர்வம் தாண்டி செய்கிறார். over enthusiastic ஆக இருக்கவேண்டாம் - கூடாது - இது 'இடிப்பாரை' - உள்நோக்கமின்றி! முக்கியமாக அவரைப் பாராட்ட - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தடை இன்னும் நீங்காது தொடரும் நிலை மாறவேண்டும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் - நியமனங்கள், புதிய மாணவர் சேர்க்கைகள் போன்ற பணிகளில் அவர் தீவிரம் காட்டவேண்டும் என்று சொல்வது நமது உரிமையாகும்.
இந்தப் பழனிக் கோவிலை எடுத்துக் கொண்டாலே, இதன் பூர்வீக வரலாறு என்ன? இந்தக் கோவிலை உருவாக்கியவர் யார்? பூசாரிகளாக (அர்ச்சகர்களாக) இருந்தவர்கள் யார்? இப்பொழுது பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருப்பதன் பின்னணி சூழ்ச்சி என்ன என்பது முக்கியமானதாகும்.
அனைத்துலக முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 8 மற்றும் 12 ஆவது தீர்மானங்கள் விமர்சனத்துக்கு உரியவையாகும்.
'கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.''
''முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.'' இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
நமது தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே! தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் - இதற்குமேல் விளக்கத் தேவையில்லை. முதலமைச்சர் காணொலி உரையில் முடிவாக ஒன்றை அழுத்தமாகக் குறிப்பி்ட்டுள்ளார். ''ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும்! திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும்! உலகம் ஒன்றாகும்.'' ('முரசொலி', 25.8.2024, பக்கம் 4). இது முத்தாய்ப்பான கொள்கை ரீதியான முத்திரை யடியாகும்.” என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/k-veeramani-question-to-minister-sekar-babu-on-murugan-conference-and-8-and-12th-resolutions-6931221