காங்கோவில் கடந்த சில நாட்களில் சுமார் 16,700 பேர் Mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி இதனால் 570 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது
உலக நாடுகளை ஒரு உலுக்கு உலுக்கியது கொரோனா. இந்த பெருந்தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டும் வந்த நிலையில் அடுத்தடுத்த பல நோய்கள் பெருந்தொற்றாக உருவெடுத்துவிடுமோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது குரங்கு அம்மை நோய். மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்பட்டும் இந்த நோய் ஆப்ரிக்கா நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இந்த நோயின் தமிழக நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார் படுத்தியிருக்கிறது.
மேலும், ஆப்பிரிக்கா நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று விமான பயணிகள் மூலமாக மற்ற நாடுகளிலும் பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் இதுதொடர்பான முகாம் தொடங்கப்படும். பயணிகளிடம் முறையாக குரங்கு அம்மை பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது” என கூறினார்.
அதேபோல் ஆப்ரிக்கா நாடுகளில் பரவும் குரங்கு அம்மை புதிய கோவிட் தொற்று அல்ல இதை எப்படி கட்டுப்படுத்துவது என அதிகாரிகளுக்கு தெரியும் என உலக சுகாதார அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் ஒவ்வொரு மாதமும் குரங்கு அம்மை நோயின் கிளேட் 2 வகையில் குறைந்தது 100 பாதிப்புகள் பதிவாவதாக கூறப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
குரங்கு அம்மை விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். நெருக்கமான உடல் தொடர்பு மூலம் இது மனிதர்களிடையே பரவும். இந்த நோய் பாதிப்பு இருந்தால் காய்ச்சல், தசைகளில் வலி, பெரிய கொப்புளங்கள் போன்ற காயம் உள்ளிட்டவை ஏற்படும்.
தற்போதைய நிலைப்படி இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு ஏதும் இல்லை என முதன்மை செயலாளர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பாதிப்புகளை விரைவாக கண்டறிய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பு நடவடிக்கைகள்:
மங்கி பாக்ஸ் தடுப்புக்கான மருந்தை டென்மார்க்கின் பவேரியன் நோர்டிக் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் 2 டோஸ் குரங்கு அம்மை பாதிப்பை 85%- 90% வரை தடுக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவை பொறுத்தவரை சீரம் நிறுவனம் இதற்கான வேக்சினை தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறது.
மேலும் டெல்லியில் 3 மருத்துவமனைகள் குரங்கு அம்மை பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் குரங்கு அம்மை கொரோனா அளவுக்கு ஆபத்தானது இல்லை என்றும் இதை தடுக்கும் முறை அதிகாரிகளுக்கு தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேக்சின் தற்போது இருப்பதாகவும் பாதிப்பு உள்ளவர்களிடம் நேரடி தொடர்பு கொண்டால் மட்டுமே இது பரவும் என்பதால் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.
source https://news7tamil.live/monkey-measles-what-are-the-symptoms-what-is-the-treatment-for-the-disease.html