காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மேலும் 3000 கன அடி நீர் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடகா - தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை காரணம் காட்டி கர்நாடகா அரசு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது. அதேநேரம், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு காவிரி விவாகாரம் தொடர்பாக முறையிட்டுள்ளது.
இந்தநிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து கர்நாடகத்தில் விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக முதலமைச்சர் மற்றும் பல அரசியல் தலைவர்களும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகியவற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கக்கூடாது என்று கர்நாடகா அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இதில் தமிழ்நாடு அரசு சார்பில் 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மேலும் 3000 கன அடி நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு வருகின்ற 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி நீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-regulatory-board-directs-karnataka-to-release-3000-cube-sec-to-tamil-nadu-1519470