source https://tamil.indianexpress.com/tamilnadu/tiruchendur-murugan-festival-vijay-arogara-chants-unite-dmk-bjp-minister-ramesh-reaction-12818400
16 11 2026
அந்த முழக்கம் முருகப்பெருமானுக்கு உரியது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கடற்கரைக் கோயிலில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் அதனைத் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் நீட்டித்தார். அசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் ஒரு ஆன்மீகத் திருவிழா, அரசியல்வாதிகளை முன்னிலைப்படுத்தும் சர்ச்சையாக உருவெடுத்தது.
தலைமுறை தலைமுறையாக பக்தர்களுக்குப் பரிச்சயமான "அரோகரா" என்ற பக்தி முழக்கம், சூரசம்ஹார நிகழ்வின் நேரலை வர்ணனையின் போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் ஆகியோரைப் புகழும் கோஷமாக மாறியது.
செவ்வாய்க்கிழமைக்குள், தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரு விஷயத்தில் உடன்பட்டன: ஆளும் த.வெ.க எல்லை மீறிவிட்டது என்பதே அது.
இந்த நிகழ்வு நடந்த சூழல் மிகவும் முக்கியமானது. கந்த சஷ்டி விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான சூரசம்ஹாரம், முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை நினைவுகூரும் நிகழ்வாகும். விரதமிருந்து அதனைக் காணத் திரளும் பக்தர்களுக்கு அந்த முழக்கம் வழிபாட்டின் ஒரு அங்கம். மைக்கை யார் பிடித்திருக்கிறார்கள் என்பதற்கும் அப்பாற்பட்ட ஆழமான அர்த்தத்தைக் கொண்ட, அனைவராலும் கூட்டாக எழுப்பப்படும் ஒரு பரிச்சயமான ஒலி அது.
முன்னாள் தி.மு.க அமைச்சர் பி. கீதா ஜீவன், ஒரு மனிதரைக் கடவுளின் நிலைக்கு உயர்த்துவதைக் கண்டித்தார். இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சரும் தி.மு.க தலைவருமான பி.கே. சேகர்பாபு, ஒரு ஆன்மீக நிகழ்வை அரசு அரசியல் மேடையாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பொது மன்னிப்பு கோர வேண்டு என்று வலியுறுத்திய நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் கோயிலுக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/11/18/vijay-meal-serves-to-children-2026-11-18-00-56-51.jpeg)
‘சாதாரண மன்னிப்பு போதாது’
பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரும், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனருமான கே. அண்ணாமலை, சாதாரண மன்னிப்பு இதற்குப் போதாது என்று கூறியுள்ளார். அதிகாரப்பூர்வ நேரலை வர்ணனையை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு இதில் தலையிட வாய்ப்பு குறைவு என்று வாதிட்ட அவர், இந்தச் சம்பவத்திற்கு விஜய் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், ரமேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது மீண்டும் நடந்தால் முதலமைச்சரையே பொறுப்பேற்க வைப்பேன் என்றும் அவர் கூறினார்.
இதற்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்த அமைச்சர் ரமேஷ், விஜய்யோ அல்லது அரசாங்கமோ இத்தகைய புகழுரைகளை ஊக்குவிப்பதில்லை என்று தெரிவித்தார். அதிகாரிகள் இது குறித்து விளக்கம் கேட்டதாகவும், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் வருத்தம் தெரிவித்து எதிர்காலத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ளதாகவும் ரமேஷ் கூறினார்.
இந்தச் சர்ச்சை, தமிழ் அடையாளம் மற்றும் இந்து ஆன்மீகம் ஆகிய இரண்டோடும் நெருங்கிய தொடர்புடைய ஒரு கடவுளைச் சுற்றியுள்ள பரந்த அரசியல் போட்டியைப் பிரதிபலிக்கிறது. தமிழ் நிலப்பரப்புடன் முருகனுக்கு உள்ள தொடர்பு சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டது: பண்டைய தமிழ் இலக்கண மற்றும் கவிதை நூலான தொல்காப்பியம், முருகப்பெருமானாக அடையாளப்படுத்தப்படும் 'சேயோனை' மலை சார்ந்த குறிஞ்சி நிலத்துடன் இணைக்கிறது.
அவரது அறுபடை வீடுகளும் அந்தப் பிணைப்பிற்கு ஒரு புவியியல் அடையாளத்தைத் தருகின்றன. பாதயாத்திரை மற்றும் காவடி எடுத்தல் போன்ற சடங்குகள், தூரம், உடல் உழைப்பு மற்றும் நேர்த்திக்கடன்கள் வழியாக உடலால் உணரப்படும் ஒரு பக்தி அனுபவமாக இதனை மாற்றுகின்றன. பக்தர்கள் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆன்மீக உறவுக்குள்தான் அரசியல் கோரிக்கைகள் நுழைகின்றன.
முருகப்பெருமானின் அரசியல் ஈர்ப்பு
இந்தக் கலவையே அவரது அரசியல் ஈர்ப்பை விளக்குகிறது. பாரதிய ஜனதா கட்சியைப் (பா.ஜ.க) பொறுத்தவரை, இந்துக்களை ஒருங்கிணைப்பதற்கான தனித்துவமான தமிழ் அடையாளத்தை முருகப்பெருமான் வழங்குகிறார். திமுகவைப் பொறுத்தவரை, அவரைக் கொண்டாடுவது என்பது தனது பகுத்தறிவுப் பாரம்பரியத்தோடு இணைந்து, தமிழ் கலாச்சாரத்தை உறுதிப்படுத்தவும், மத நம்பிக்கையாளர்களுக்கு மதிப்பளிக்கவும் உதவுகிறது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற பழனி மாநாடு குறித்த செய்திகளில், திமுகவை இந்து மதத்திற்கு எதிரான கட்சியாக பா.ஜ.க சித்தரிப்பதற்குப் பதிலடியாகவே இந்த நிகழ்வைக் கட்சி நிர்வாகிகள் பார்த்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் இந்த ஒரே ஒரு இந்து கடவுளை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட பல நிகழ்வுகளுக்குத் தமிழகம் சாட்சியாக இருந்துள்ளது. 2020 நவம்பரில், அப்போதைய பா.ஜ.க மாநிலத் தலைவரான எல். முருகன், பெருந்தொற்று காரணமாக அ.தி.மு.க அரசு அனுமதி மறுத்ததையும் மீறி 'வேல் யாத்திரை' நடத்த முயன்றார். அப்போது அவரையும் மற்ற தலைவர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
2024 ஆகஸ்டில், தி.மு.க அரசு பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியது; அதனை ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அவர் நேரில் பங்கேற்காததை பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.





