இனி போலீஸ் நிலையம் போகாமல் புகார்; ஆன்லைனில் 'இ.சி.எஸ்.ஆர்' ரசீது பெறும் புதிய வசதி 18 11 2026
பொதுமக்களின் வசதிக்காகத் தமிழக காவல்துறை பல்வேறு டிஜிட்டல் முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே இணையதளம் வாயிலாகத் தங்களது புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR - Electronic Community Service Register) ரசீதைப் பெறும் புதிய இணையவழிச் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தப் புதிய இணையவழிச் சேவையைத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் டாக்டர் மகேஷ்குமார் அகர்வால், ஐ.பி.எஸ்., நாளை (நவம்பர் 18, 2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக காவல்துறை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வழக்கமாகப் பொதுமக்கள் ஏதேனும் புகார் அளித்தால், காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சி.எஸ்.ஆர் (CSR) எனப்படும் சமூக சேவைப் பதிவேடு ரசீதைப் பெற வேண்டிய சூழல் இருந்து வந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த 'e-CSR' திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தபடியே ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்து, உடனடியாக மின்னணு ரசீதைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மூலம் பொதுமக்களின் அலைச்சல் மற்றும் நேரம் மிச்சமாவதுடன், புகார்கள் மீதான நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும் விரைவாகவும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறையின் இந்தப் புதிய டிஜிட்டல் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





