திங்கள், 29 ஏப்ரல், 2013

இலவசமாகப் படிக்கலாம்!


விண்வெளி தொழில்நுட்பப் படிப்புகளை இலவசமாகப் படிக்கலாம்!


விண்வெளித் துறையில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி

விண்வெளி ஆய்வுத் துறையில் உலக நாடுகளை வியக்க வைக்கும் வகையில் இந்தியா முன்னேறி வருகிறது. விண்வெளி ஆய்வுக்குத் தொடர்புடைய அறிவியல் தொழில்நுட்பப் படிப்புகளில் இளைஞர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக திருவனந்தபுரம் அருகே வாலியமலையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி (ஐஐஎஸ்டி) செயல்பட்டு வருகிறது. இஸ்ரோவின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கல்வி நிறுவனம், ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் ஸ்பேஸ் இன்ஸ்டிட்யூட். உலக அளவில் விண்வெளித் துறை சம்பந்தமாக இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளை வழங்கும் முதல் கல்வி நிலையம் இது.

இங்கு ஏவியானிக்ஸ், ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், பிசிக்கல் சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெக். படிக்கலாம். பி.டெக். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங், ஏவியானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 60 இடங்களும் பி.டெக். பிசிக்கல் சயின்சஸ் பாடப்பிரிவில் 36 இடங்களும் உள்ளன.

பி.டெக். ஏவியானிக்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடத்துடன் அட்வான்ஸ்ட் எலெக்ட்ரானிக்ஸ் (டிஜிட்டல் அண்ட் கம்யூனிக்கேஷன் கண்ட்ரோல், சிஸ்டம்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்) போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. இந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் டிஎஸ்பி, ஆர்எஃப்அண்ட் கம்யூனிக்கேஷன், ஆன்டெனா, பவர் எலெக்ட்ரானிக்ஸ், மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட துறைகளை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம்.

பி.டெக். பிசிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு, ஸ்பேஸ் சயின்ஸ், ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி, ஸ்பேஸ் அப்ளிக்கேஷன் போன்ற துறைகளில் பயன்பாட்டு அடிப்படை அறிவியல் பாடங்கள் கற்றுத்தரப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய துறைகளில் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும். பி.டெக். பிசிக்கல் சயின்சஸ் துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள் ரிமோட் சென்சிங் அண்ட் ஜிஐஎஸ், அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ், எர்த் சிஸ்டம் சயின்ஸ் ஆகிய துறைகளில் சிறப்புப் படிப்புகளைப் படிக்கலாம்.

பி.டெக். ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளைக் கற்றுத் தர இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இருந்தாலும்கூட, ஐஐஎஸ்டி ஸ்பேஸ் டெக்னாலஜி படிப்பு தனி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மெக்கானிக்கல் டிசைன், மானுபாக்ச்சரிங் சயின்ஸ், ஸ்பேஸ் டைனமிக்ஸ் உள்ளிட்ட மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடங்களும் கற்றுத்தரப்படும். இந்தப் படிப்பைப் படித்து முடித்த மாணவர்கள் ஃபிளைட் மெக்கானிக்ஸ், ஏரோடைனமிக்ஸ், தெர்மல் அண்ட் புரபல்ஷன், ஸ்டிரக்ச்சர் அண்ட் டிசைன், மானுபாக்ச்சரிங் சயின்ஸ் ஆகிய துறைகளில் சிறப்புப் படிப்புகளைப் படிக்கலாம்.

இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் சேர்க்கப்படும் மாணவர்கள், இஸ்ரோ திட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்புத் துறைகளில் பயிற்றுவிக்கப்படுவார்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் கோடை மற்றும் குளிர்காலத்தில் ஒவ்வொரு செமஸ்டரிலும் நான்கு வாரப் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள். ராக்கெட், மைக்ரோ சாட்லைட் துறைகளில் புராஜெக்ட்டுகளை மேற்கொள்ளும்படி மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதாவது, விண்வெளித் துறையில் திறமை வாய்ந்தவர்களை உருவாக்குவதற்கு ஏற்ப சிறப்பான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இங்கு படிக்கும்போதே, விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பிளஸ் டூ படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் ஒரே முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். இந்தியப் பிரஜைகள் மட்டுமே இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு, கிரீமிலேயர் அல்லாத ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 1988ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் 1983ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும்.

முன்பு, ஐஐடி நுழைவுத் தேர்வு மூலம் இந்தக் கல்வி நிறுவனத்தின் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் ஐஐஎஸ்டி கல்வி நிறுவனமே நுழைவுத் தேர்வை நடத்தியது. தற்போது, இந்த இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஜேஇஇ-மெயின் தேர்வில் தகுதி பெற்று, ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும். அந்தத் தேர்வில் பொதுப் பிரிவு மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆகிய பாடப்பிரிவுகளில் குறைந்தது 5 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், இந்த மூன்று பாடங்களிலும் சேர்த்து 20 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களில் கிரீமிலேயர் அல்லாத பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள், பொதுப் பிரிவு மாணவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் சேருவதற்கான தகுதியாகக் கருதப்படும். ஜேஇஇ மெயின் தேர்வுக்கு 60 சதவீதமும் பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையில் சிபிஎஸ்இ தயாரிக்கும் ரேங்க் பட்டியலின் அடிப்படையில் இந்தப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும்.

இங்கு படிக்க இடம் கிடைத்துவிட்டால் போதும். படிப்புச் செலவு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இங்கு படிக்கக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஹாஸ்டலில் இலவசமாகத் தங்கலாம். ஹாஸ்டலில் உணவுக்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஐஐஎஸ்டியில் படிக்கும் மாணவர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும். இலவசமாக இந்தக் கல்வி நிறுவனத்தில் படித்து விட்டு, இஸ்ரோவில் வேலை செய்ய விருப்பம் இல்லை என்றால் இந்த நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஐஐஎஸ்டி கல்வி நிலையத்தில் சேரும்போதே, இதற்கான உத்தரவாதப் பத்திரத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

மே 17ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 8-07-2013. ஏப்ரல் 30ஆம் தேதி அட்மிஷன் விவரங்கள் குறித்த தகவல் கையேடு இணையதளத்தில் வெளியிடப்படும். விண்வெளித் துறையில் ஆர்வமிக்க திறமையான மாணவர்களுக்கு ஏற்ற கல்வி நிறுவனம் இது.

 விவரங்களுக்கு: www.iist.ac.in