அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
260. "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!'' என்று இப்ராஹீம் வேண்டிய போது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் "அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.''என்றார். "நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான்.
261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
262. அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
263. தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவைகளற்றவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.
264. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
265. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல் வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
266. பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.
267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றிலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!80
268. ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
269. தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.