திங்கள், 29 ஏப்ரல், 2013

அம்பலமாகும் ரகசியங்கள்


அம்பலமாகும் அரண்மனை ரகசியங்கள் விக்கிலீக்ஸ் வீசும் வெடிகுண்டுகள்!


அமெரிக்கா வெளிவிவகாரத்துறைக்கு உலகெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவரவர் பணியாற்றும் நாட்டிலிருக்கும் அரசியல், சமூக நிலவரங்களை அவ்வப்போது குறிப்புகளாக அனுப்புவார்கள். அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் இந்த United States diplomatic cables விக்கிலீக்ஸ், ‘எப்படியோ’ கைப்பற்றி பகிரங்கப்படுத்தி வருகிறது.

2006-ஆம் ஆண்டு இணையதள செய்தி ஊடகமாக துவக்கப்பட்ட விக்கிலீக்ஸ், அரசுகளின் பாதுகாக்கப்பட்ட ரகசிய ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவருவதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் பல்வேறு நாடுகளைப் பற்றிய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை பகிரங்கப்படுத்தியது. சமீபகாலமாக இந்தியா குறித்த தகவல்களை கசியவிட்டுக் கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ். கசிவுகளிலிருந்து, உள்ளது உள்ளபடி...


புலிகளுக்குப் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட ராஜீவ்
நாள்:1988 ஏப்ரல் 5, 10:45 (செவ்வாய்க்கிழமை)
Canonical ID: 88COLOMBO2367_a

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து  (விடுதலைப் புலிகளுக்கு அவர்கள் அதிகாரத்தின் கீழிருந்த பகுதிகளிலிருந்து கிடைத்து வந்த), வரி வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் விடுதலைப்புலிகளுக்கு மாதம்தோறும் பணம் கொடுப்பதற்கு பிரதமர் ராஜீவ்காந்தி ஒப்புக் கொண்டிருப்பதாக இந்தியத் தூதர் ஜே.என்.தீக்ஷித், மற்றும் சென்னையில் உள்ள விடுதலைப் புலிகள் செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி ஏப்ரல் 5-ஆம் தேதி முக்கிய இலங்கை நாளிதழ்கள் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் செய்தி, முதலில் லண்டனிலிருந்து வெளியாகும் லண்டன் அப்சர்வரில் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாகியிருந்தது.

மாதந்தோறும் அளிக்கப்படவுள்ள இந்த உதவித் தொகை, 50 லட்சம் இந்திய ரூபாய்களாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை இறுதியில் புலிகளுக்கு ஒரு தொகை கொடுக்கப்பட்டதாக தூதரக அதிகாரி உறுதி செய்தார். செப்டம்பர் இறுதியில் இடைக்கால நிர்வாகக் குழுவில் பங்கேற்பதாக அளித்த உறுதிமொழியிலிருந்து புலிகள் பின்வாங்குவதற்கு முன் ஒருமுறை பணம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தியா - இலங்கை இரு தரப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய பிரபாகரனுக்கு ராஜீவ் காந்தி, ஜூலை மாதம் அளித்த வாக்குறுதிகள் கொண்ட ஒரு பெரிய ரகசிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதி இந்தப் பணம் என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத சென்னையில் உள்ள ஒரு புலிகளின் செய்தித் தொடர்பாளர்.


ஜெயலலிதா: ஆண்களின் உலகில் வெற்றி கண்ட இரும்பு மனுஷி
நாள்: 2009-03-19, 03:44
Reference ID09CHENNAI81

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தமிழ்நாட்டு அரசியலில் தனித்து நிற்பவர் ஜெயலலிதா. ஓர் ஆண்தான் அவரை அரசியலுக்குக் கொண்டு வந்தார் என்றாலும் தன்னுடைய முயற்சி, புத்திசாலித்தனம், அரசியல் நுண்ணறிவு இவற்றால் அதிகாரத்தின் சிகரங்களை அடைந்தவர். அதீத ஆண்மை கொண்ட தலைவர்களை உடைய - அவர்களில் பலர், முதலமைச்சர் கருணாநிதி உட்பட இரண்டு மனைவிகள் வைத்திருப்பதைப் பகிரங்கமாக பறைசாற்றிக் கொள்பவர்கள்- திமுகவை சரிக்குச் சரியாக எதிர்கொண்டதாலும், தன் லட்சியங்களை அடைய வன்முறையைக்கூட அனுமதிக்கத் தயங்காததாலும்தான் அவரால் இதை சாதிக்க முடிந்தது. இது பெண்களைப் பற்றிய வழக்கமான பார்வையை மாற்றி, ஜெயலலிதாவை உறுதி வாய்ந்த மனுஷியாக மக்களை எண்ணச் செய்கிறது. அவரது அமைச்சரவையில் உள்ள ஒரே ஆண் என்று இந்திரா காந்தியைப் பற்றிச் சொல்லப்படும் பழைய ஜோக் போல, அதிமுகவில் இருக்கும் ஒரே ஆண் என இவரைப் பற்றி அவ்வப்போது மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்திரா காந்தியைப்போல. இவரும் பெண் தெய்வங்களை சக்தியாக வழிபடும் இந்திய மரபைப் பயன்படுத்திக்கொண்டு தன்னையே தெய்வமாக சித்தரித்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றவர்.

ஜாதி மற்றும் பெண் என்பவையும் அவர் அதிகாரத்தில் உயர உதவின. உயர் ஜாதி (பிராமணர்கள்), தாழ்த்தப்பட்டவர்கள் (தலித்கள்), பிற்படுத்த வகுப்பில் ஒரு சாரார் (தேவர்கள்) ஆகியோரை முதன்மையாகக் கொண்ட ஒரு கூட்டின் மூலம் கெட்டிக்காரத்தனமாக திமுகவின் ஆதரவுத் தளமான பிற்பட்ட வகுப்பினரை எதிர்கொண்டார். பெருமளவில் வந்து வாக்களித்த பெண்களின் வாக்குகளில் கணிசமானவற்றைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பெண்களைக் கவர்ந்தார். காலம் காலமாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த திமுகவினால், தான் நசுக்கப்படுவதைப் போன்று மறைமுகமாகச்  சித்தரித்தார். பெண்களுக்கு நேரடியாகப் பலனளிக்கும், மாணவிகளுக்கு இலவச சைக்கிள், சுய உதவிக்குழுக்களுக்கு ஆதரவு போன்ற திட்டங்களின் மூலம் நேரடியாகப் பெண்களின் வாக்குகளைக் கவர முயற்சித்தார். ஆறரைக் கோடி மக்கள் கொண்ட மாநிலத்தின் முதல்வராக பலமுறை ஆட்சி செய்தது இந்தியப் பெண்கள், அரசியலில் தடம் பதிக்க முடியும் என்பதற்கான ஒரு வரலாற்று சாட்சியம்.   


தனித் தமிழ்நாட்டிற்கு அமெரிக்க ஆதரவு  தருமா?
1975 ஜூலை 3, 12:08 (வியாழன்)
Canonical ID:1975NEWDE08889_b

நேற்று மாலை நான் தமிழ்நாட்டின் தொழிலாளர், வீட்டுவசதித்துறை அமைச்சர்  ராசாராமை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். அமைச்சர் சைமனுடன் அவர் இருக்கும் படம் வெளியிடப்பட்டிருந்த நம் அயலகத்துறை செய்திமடலின் பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்தேன். இந்தியாவில் நடப்பதைப் பற்றி என் கருத்துக்கள் என்ன என்று அவர் கேட்டார் (அப்போது இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது-பு.த.). நாம் கடைசியாகச் சந்தித்தபின் எவ்வளவோ நடந்துவிட்டது என்ற ரீதியில் நான் பதில் சொல்ல ஆரம்பித்தேன். அவர் என்னை இடைமறித்து, ‘நானே உங்களிடம் பேச வேண்டும் என்றிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள், சந்தோஷம். நான் உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்க வேண்டும். தமிழ்நாடு தனியான சுதந்திர நாடாக வேண்டும் என முடிவெடுத்தால், அமெரிக்கா உதவ முடியுமா?’ எனக் கேட்டார். நானும் நேரடியாகவே பதில் சொல்கிறேன்: ‘முடியாது. இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம். இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறோம். சீரியசாக இந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கிறதா?’ எனக் கேட்டேன். ‘இல்லை. மேல் மட்டத்தில் அந்த மாதிரி சிந்தனை இல்லை. திமுக பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. ஆனால், கட்சியில் பல இளைஞர்கள் சில நாள்களாக இதைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள்  சோவியத் யூனியனும், மற்ற கம்யூனிஸ்ட் நாடுகளும் இங்கே ஜனநாயகத்தைக் கொல்லும் இந்திரா காந்தியின் முயற்சியை ஆதரிக்கிறார்கள். அந்த முயற்சி வெற்றியடைந்தால், இங்கே கம்யூனிசம் வளரும். தமிழ்நாடு பிரிந்துவிட வேண்டும், அதற்கு அமெரிக்கா உதவுமா என அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அதனால் கேட்டேன்’ என்றார். அதற்குப் பிறகு அவர் அதைப்பற்றி என்னிடம் பேசவில்லை.

இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், எனக்கு முன்னர் அறிமுகமாகாத ஓர் உள்ளூர் கல்வியாளர், இரண்டு நாள்களுக்குமுன் பேசி நேரம் வாங்கிக் கொண்டு, என்னை சந்தித்தார். நாட்டில் இப்போதுள்ள நிலைமையால் கவலை கொண்ட அவர் நேற்று முதலமைச்சரை சந்தித்து, நிலைமை மேலும் மோசமாகும் என்றும், இந்தியாவின் மற்ற பகுதிகள் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கின்கீழ் வருமானால், தமிழ்நாடு தனியாகப் பிரிந்து போக முயற்சி செய்ய வேண்டும் என்று அவரிடம் தான் சொன்னதாகவும் கூறினார்.  அதற்கு முதலமைச்சர், என்ன நடக்கும் எனத் தனக்குத் தெரியாதென்றும், தான் நிலைமைகளைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும், வியட்நாம் அனுபவத்திற்குப் பிறகு ஆசியாவில் புதிதாகத் தலையிடாது என்று, தான் நினைப்பதாகவும் சொன்னதாகச் சொன்னார்.


விமானப்  பேரத்தில் ராஜீவ்காந்தி
நாள்: 1975 அக்டோபர் 21, 12:25 (செவ்வாக்கிழமை)
Canonical ID: 1975NEWDE14031_b

புதுதில்லி, இந்தியா
ரகசியம்

1.விக்ஜென்  விமானங்கள் தொடர்பாக ஸ்வீடன் நாட்டினரோடு இந்தியாவின் சார்பாக பேச்சுகள் நடத்தும் முக்கியமான நபர், திருமதி. காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி என ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தார்கள். விமானத் தொழில் துறையோடு அவருக்கு உள்ள ஒரே தொடர்பு (எங்களுக்குத் தெரிந்தவரை)  அவர் இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட் என்பதுதான். அவர் ஓர் தொழில்முனைவர் என்பதை இப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறோம்.

2.டஸால்ட் நிறுவனம் தனது மிராஜ் விமானங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, விமானத் தளபதி மெஹராவின் மருமகனை நியமித்திருப்பதாக ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

திருமதி. காந்தி (ஸ்வீடீஷ் அதிகாரிகளின் தகவல்களின்படி) பிரிட்டீஷ் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு காரணமாக பிரிட்ஷ் தயாரிப்பான ஜாகுவார் விமானங்களை வாங்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார். மிராஜ் அல்லது விக்ஜென் என்ற இரண்டில் ஒன்றிற்கு சாதகமாக முடிவு இருக்கும். உலக அரசியலில் ஸ்வீடன் நடுநிலை வகிப்பதால், அந்த நாட்டு விமானங்களின் விலை அதிகமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தக்கூடாது என ஸ்வீடன் அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்திய விமானப்படை அதிகாரிகளை பேரம் பேச அனுமதிக்காமல், திருமதி. காந்தியே நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஆதிக்கம் செலுத்துவது குறித்து ஸ்வீடன் அதிகாரிகள் எரிச்சலடைந்திருக்கிறார்கள்.

3.விமானம் ஒன்றுக்கு 40 அல்லது 50 லட்சம் டாலர்கள் என்ற விலையில் 50 விக்ஜென் விமானங்கள் வாங்க இந்தியா முடிவு செய்திருப்பதாக ஸ்வீடன் தூதரக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். சோவியத் ராணுவ விமானங்களை இனிமேல் வாங்கப் போவதில்லை என இந்தியா முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.


திமுக உடைந்து சிதறும்: தலைமைச் செயலர் போட்ட தப்புக் கணக்கு
1976 பிப்ரவரி 18, 9:20 (புதன்கிழமை)
Canonical ID:1976NEWDE02455_b

ரகசியம்

தூதரக அரசியல் பிரிவு அதிகாரியும் நானும் தலைமைச் செயலாளர் சபாநாயகத்தை அவரது இல்லத்தில் பிப்ரவரி 16 காலை, அவர் தலைமைச் செயலகத்திற்குப் புறப்படும்முன் சந்தித்தோம். லுங்கி கட்டிக் கொண்டு காஷுவலாக இருந்த அவர், எங்களை அன்போடு வரவேற்று காபி கொடுத்து உபசரித்து எங்களது பல கேள்விகளுக்கு பதில் சொன்னார்.  திமுக வன்முறைக்குத் திட்டமிடுகிறது, லஞ்சம் ஊழல் இவற்றை ஊக்குவிக்கிறது என்ற இந்திரா காந்தியின் குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டோம். மக்கள் இந்தக் குற்றச்சாட்டை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை எனக் கருதுவதாகச் சொன்னார். தமிழ்நாட்டில் லஞ்சம் என்பது  தனித்துவமான  விஷயமில்லை என்றும் திமுக அரசின் சமூக நலத் திட்டங்கள் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களைத்தான் மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என்றும் சொன்னார். திமுகவின் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகளுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்றார். ஆனால், திமுக வேகமாக உடைந்து சிதறிக் கொண்டிருப்பதாகவும் அது தனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் சொன்னார். ஆனால், பிளவுபட்ட காங்கிரஸ் (அப்போது காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் (ஸ்தா.காங்), இந்திரா தலைமையில் ஒரு காங்கிரஸ் (இ.காங்) என இரண்டாகப் பிரிந்திருந்தது). ஒன்று சேர்ந்தாலும் அது வெற்றிக்கு உதவாது. காங் (0) தலைவர்களில் பலர் இணைப்பை விரும்பினாலும், தொண்டர்கள் அதை ஏற்கவில்லை என்று நினைப்பதாகவும் சொன்னார். குடியரசுத் தலைவர் ஆட்சி இரண்டு வருடம் நீடிக்கலாம் என்றார்.


எம்.ஜி.ஆரும் சி.ஐ.ஏ. யும்

ஸ்தாபன காங்கிரஸ் இதழான, ‘நவசக்தி’ ‘அதிமுகவுக்கும், சிஐஏவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தியை அப்படியே மொழிமாற்றம் செய்து அமெரிக்காவுக்கு குறிப்புகளாக அனுப்பியிருக்கிறார்கள். சென்னை துணைத் தூதரக அதிகாரிகள்.

எம்.ஜி.ஆர்., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு தோழமை பேணியிருந்ததை அமெரிக்கா விரும்பவில்லை என்பது இதுதொடர்பான சில குறிப்புகளில் தெரிகிறது.


மதிமுகவுக்கு விடுதலைப்புலிகள் நிதியுதவி?
தமிழக அரசியல் தலைவர்கள் சிலருக்கு விடுதலைப்புலிகள் நிதியுதவி செய்திருக்கிறார்கள். குறிப்பாக, மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு, 1993-இல் திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக என்கிற கட்சியை உருவாக்குவதற்கு ஆரம்பக்காலத்திலும் புலிகள் நிதியுதவி செய்திருக்கிறார்கள் என்று புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தலைவர்களில் ஒருவரான சந்திரஹாசன் கருதுவதாக ஒரு தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கிறது எனினும் புலிகளுடனான தமிழக அரசியல் தலைவர்களின் பொருளாதார உறவு, இன்னமும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.


பாக்.கோடு கைகுலுக்கத் தயாராக இருந்த இந்திரா
பாகிஸ்தான் பிரதமர் ஜூல்பிகர் அலிபுட்டோவுக்கு, 1974-இல் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஒரு கடிதம் எழுதுகிறார். அப்போதுதான் இந்தியா பொக்ரானில் தன்னுடைய முதல் அணுசோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தது. பொருத்தமான நிபந்தனைகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் அணு தொழில்நுட்பத்தை, இந்தியா, பாகிஸ்தானோடு பகிர்ந்துக்கொள்ளத் தயார் என்று அக்கடிதத்தில் இந்திரா நட்புக்கரம் நீட்டினார். ஆனால், புட்டோ ஏனோ இதை மறுத்துவிட்டார்.


சஞ்ச காந்தியை கொல்ல மூன்று முறை முயற்சி
1976 ஆகஸ்ட் 30 அல்லது 31-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபரால் இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி சுடப்பட்டார். ஆனால், இந்தக் கொலைமுயற்சியில் இருந்து பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார். இந்திய உளவுத்துறை வட்டாரம் சொல்வதின்படி இது அவர் மீதான மூன்றாவது கொலைத் தாக்குதல் என்று செப்டம்பர் 1976-இல் அனுப்பப்பட்ட குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்திரா, எமர்ஜென்ஸி கொண்டு வந்ததின் காரணமாக அடுத்து நடந்த 1977 தேர்தலில் தோல்வியுற்றார். பதவிக்கு வந்த ஜனதா அரசு, சஞ்சய் மீதான கொலைமுயற்சி விசாரணைகளைக் கண்டுகொள்ளவில்லை. 1980-இல் நடந்த விமான விபத்தில் சஞ்சய், 33 வயதில் மரணமடைந்தார்.


வீரப்பனுக்குப்பின்
வீரப்பன் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு நிலவும் நிலவரத்தை, வீரப்பனால் இதுவரை இருந்து வந்த தொல்லை, மக்களுக்கு நீங்கியது. ஆனால், தர்மபுரி மாவட்டத்துக்குள் சுலபமாக மாவோயிஸ்ட்கள் நுழைந்து விடுவார்களோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. திமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு இங்கே வசிக்கும் வன்னிய இளைஞர்களிடம் நல்ல செல்வாக்கு இருந்தாலும், ஆந்திராவில் வலுவாக காலூன்றிய மக்கள் போர்ப்படை போன்ற குழுக்கள் இங்கே வளர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தபடி இப்பகுதியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றினால் மட்டுமே இந்த அபாயம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று சென்னைத் துணை தூதரக அதிகாரிகள் அனுப்பிய குறிப்பு தெரிவிக்கிறது .


வாக்காளர்களுக்கு லஞ்சம்
தேர்தலில் வாக்கு பெற இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நடைமுறையாக்கி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் காலையில் வீடுகளில் போடப்படும் செய்தித்தாள்களுக்குள் கூட கரன்சி நோட்டை வைத்து விநியோகிக்கிறார்கள். இவ்வாறாக செலவழிக்கப்படும் பணத்தின் ஆதாரம் தேர்தல் நிதியாக கட்சிகளால் பெறப்படுகிறது. இதுவே அரசியல் ரீதியான ஊழல்களுக்கு அடிகோலுகிறது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வாக்காளர்கள் அனைவருமே வாக்குக்கு பணம் வழங்கப்படுவதை தேர்தல்கால நடைமுறையென்று சகஜமாகப் பேசுகிறார்கள். அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதானக் கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் - மே 13, 2009 அன்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகத்தின் முதன்மை அலுவலகர் ப்ரெட்ரிக் ஜே.கப்ளான் அனுப்பியிருந்த குறிப்பிலிருந்து.


ஜார்ஜ் பெர்ணாண்டஸ் - சி.ஐ.ஏ. தொடர்பு?
தொழிற்சங்கச் செயல்பாடுகளில் தீவிரமான தலைவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். சோஷலிஸ்ட்டாக அறியப்படும் இவர், பொதுவாக அமெரிக்க எதிர்மனோபாவம் கொண்டவர். கோகோ கோலா, ஐ.பி.எம். போன்ற அமெரிக்க நிறுவனங்களை, தொழிற்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவை விட்டு விரட்டியடித்தார்.

ஆனால், எமர்ஜென்ஸியின்போது இந்திராவை எதிர்த்துப் போராட அமெரிக்க உதவியை நாட விரும்பினார். இதற்காக அமெரிக்கத் தூதரை சந்திக்கவும், சி.ஐ.ஏ., மூலமாக பண உதவி பெற முயன்றார் என்றும் இங்கிருந்து குறிப்புகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.