செவ்வாய், 2 ஏப்ரல், 2013

News-சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்!




29 Mar 2013
சவூதி அரேபியாவில் உள்நாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான சுதேசி மயமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சட்டவிரோத தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் பணியை அந்நாட்டின் தொழில் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. பரிசோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் நாளை தொடங்கப் போகும் சவுதி அரேபிய அரசின் மூன்று துறைகள் இணைந்து நடத்தும் NITHAKATH CLEANUP எனும் மிகப் பெரிய தேடுதல் வேட்டையில் மிக அதிகமான வெளிநாட்டினர் குறிப்பாக இந்திய தொழிலாளர்கள் பாதிக்கப் பட வாய்ப்புள்ளது.

நிறுவனங்களின் விசாவின் கீழ் மிகக் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் அடிமட்ட தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லையென்றாலும், மேலாளர் மற்றும் விற்பனைப் பிரதிநிதி போன்ற பதவிகளில் நிறுவனங்களின் விசாவின் கீழ் பணியாற்றும் வெளிநாட்டினர்களும் பணியிழக்கும் வாய்ப்புள்ளது. சொந்த ஸ்பான்ஷரின் கீழ் வேலைச் செய்யாமல் வேறு பணிகளை புரிபவர்கள், தங்கும் அனுமதி(இகாமா)யின் கால அவகாசம் தீர்ந்தவர்கள், தனிப்பட்ட வீட்டு வாகன ஓட்டி விசாவில் வந்து நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், ஸ்பான்ஸர்களின் கீழ் வேலைச் செய்யாத ஃப்ரீ விசாவில் பணியாற்றுபவர்கள், உரிய ஆவணம் இன்றி சட்டவிரோதமாக வேலை பார்ப்பவர்கள், மற்றும் தங்கியிருப்பவர்கள் ஆகியோரை கைது செய்து நாடு கடத்த கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில்-உள்துறை அமைச்சகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ்வும் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தலைநகரான ரியாதில் பத்ஹா, தம்மாமின் இதய பகுதியான ஸீக்கோ பில்டிங் பகுதி, ஜித்தா, அல்ஹஸ்ஸா ஆகிய பகுதிகளில் போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் கடந்த சில தினங்களாக சோதனை நடத்தினர். சனிக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் ரெய்டு தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிபந்தனைகளை கடைப்பிடிக்காத சிறு கடைகள் பூட்டிக்கிடக்கின்றன. ஃப்ரீ விசாக்காரர்களான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி கட்டிட வேலைகளை நடத்தி வந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் நேற்று முதல் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன.

நாட்டின் தொழில்துறையை சட்டப்பூர்வமாக மாற்றவும், சுதேசிகளுக்கு முடிந்தவரை வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் நோக்கமாக கொண்டு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவூதியின் தொழில் அமைச்சர் எஞ்சீனியர் ஆதில் ஃபகீஹ் தெரிவித்துள்ளார். கல்வி தகுதியும், பணிச்செய்ய தயாராக உள்ள உள்நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2011 நவம்பர் மாதம் முதல் சுதேசிமயமாக்கும் திட்டமான நிதாகத் சவூதியில் அமல்படுத்தப்பட்டது.

சவூதி அரசின் புதிய சட்டத்தின் மூலம் தமிழக தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தை தடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"சவுதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, 25 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பதால், அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நிதாகத் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனால் அங்கு பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வேலைக்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் மொத்தம் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும், அவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான இந்தியர்களும் அடக்கம் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஊதியத்தை நம்பியே வாழ்கின்றன. இதனை கருத்தில் கொண்டு தமிழர்கள் உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்கள் தங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்திக் கொண்டு தாயகம் திரும்ப வசதியாக, நிகாதத் சட்டத்தின் அமலாக்கத்தை இன்னும் சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கும்படி சவுதி அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேரள ஊடகங்கள் இதுக் குறித்து மிகப் பெரிய செய்தியறிக்கை மற்றும் ஆய்வுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கையில் தமிழக ஊடகங்கள் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை...... பொதுவாகவே நமது ஊடகங்கள் பாதிப்புகள் ஏற்பட்ட பின்பு தான் வந்து ஒப்பாரி வைக்குமே தவிர முன்கூட்டியே விழிப்புணர்வு விசயங்களில் கோட்டை விட்டுவிடும் (இலங்கை பிரச்சினை போல) . நமது அரசியல் தலைவர்களிலும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் மட்டுமே இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தே எங்களுக்கு உற்ற தோழன் போல காட்டிக் கொள்ளும் தமுமுக, தநாதஜ போன்ற இயக்கங்களும் இது குறித்து வாய் திறந்ததாக தெரியவில்லை