வியாழன், 24 நவம்பர், 2016

அரசு சேவைகளில் பழைய நோட்டுகளை பயன்படுத்த மீண்டும் அவகாசம்?

அரசு சேவைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்று மாலை இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மக்கள் செலவினங்களுக்கு பணம் கிடைக்காமல் திண்டாடினார்கள்.
இதையடுத்து அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், தகன மேடை, ரெயில் டிக்கெட்டுகள், பொது போக்குவரத்து, விமான டிக்கெட், மாநகராட்சிகளில் வரி செலுத்துவது, புராதன இடங்களுக்கான நுழைவு சீட்டுகள் ஆகியவற்றுக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு சலுகை அறிவித்தது.
இந்த சலுகைகள் ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு இன்று நள்ளிரவுடன் கால அவகாசம் முடிவடைகிறது. ஆனால் புதிய ரூபாய் கிடைப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. 2000 ரூபாய் நோட்டுகள் ஓரளவிற்கு பெரும்பாலான இடங்களில் கிடைத்தாலும் கூட, புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. எனவே புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த பிரச்னையை போக்க பழைய ரூபாய் நோட்டுகளை அரசு சேவைகளில் பயன்படுத்துவதற்கான அவகாசம் வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்று மாலை இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.