இந்தியாவில் உள்ள திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகியவை சேர்ந்த திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையானது என்றும் அதிலும் தமிழ் மொழி மற்ற திராவிட மொழிகளை விட மிகவும் பழமையானது என ஜெர்மனியில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளங்க் கல்வி நிறுவனத்தின் மானுடவியல் வரலாற்றுத்துறையும் டேராடூனில் உள்ள இந்தியன் வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் அமைப்பும் இணைந்து சர்வதேச குழு நடத்திய மொழிகள் குறித்த ஆய்வில் இந்தியாவில் திராவிட மொழிக் குடும்பம் தான் பழமையான மொழிக்குடும்பம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் அமைப்பைச் சார்ந்த விஷ்ணு பிரியா கோலிபாக்கம் என்பவர் திராவிட மொழிகள், அதன் தொடக்கம் மற்றும் தொன்மை குறித்த ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வில் கடந்த 3500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தோ ஆரிய இன மக்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாகவே திராவிட மொழி பேசும் திராவிட இன மக்கள் இந்தியாவில் வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் செம்மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கவிதைகள், பாடல்கள், குறிப்புகள் மற்றும் ஆன்மிக கட்டுரைகள் மட்டுமே வரலாற்று ரீதியாக தொடர்ச்சியானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு இந்தியாவிலும் திராவிட மொழிகள் இப்பொழுது இருப்பதைவிட அதிக அளவிலான மக்களால் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 மொழிகளுக்கு தாய் நாடாக விளங்கும் தெற்கு ஆசியாவில் திராவிடம், இந்தோ ஐரோப்பா, ஆஸ்டோ அஸிடிக்கா மற்றும் சீன திபெத்திய நாட்டு மொழிகள் தோன்றி வழக்கில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் துணைக் கண்டமான இந்தியாவில் திராவிடர்களே இந்தியாவின் பூர்வக்குடி மக்கள் எனவும் திராவிட மொழியான தமிழே அவர்களின் மொழியாக இருந்திருக்க வேண்டும் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்விற்காக திராவிட இனத்தைச் சேர்ந்த 20 பிரிவு மக்களிடம் நேர்காணல், கேள்விகள் மற்றும் புள்ளி விவரங்கள் மூலம் ஆய்வுகள் நடத்தியதாகவும் ஆய்வை மேற்கொண்ட விஷ்ணு பிரியா தெரிவித்துள்ளார். அவர் மேற்கொண்ட ஆய்வு உண்மைதானா என்பதை உறுதி செய்ய நவீன புள்ளி விவர ஆய்வுகளின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேக்ஸ் பிளங்க் கல்வி நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வு அகழ்வாய்வு ஆராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப்பட்ட தரவுகள் மற்றும் அதன் கலாச்சாரத்தோடு ஒத்துப்போவதாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.