சனி, 4 மார்ச், 2017

நவீனமாகும் விவசாயம்: எல்இடி ஒளியில் வளரும் செடி!

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப விவசாயமும் நவீனமயமாக மாறி வருகிறது. மண் இல்லாமல், செடிகளை வளர்க்கும் முறை, விவசாயத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் ‌‌நியூயார‌க் நகரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பௌரி உட்புறப் பண்ணையில் இந்த முறையில் பல தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.
சமீபகாலமாக ‌பிரபலமாகி வரும் ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் எல்இடி ஒளிச்சேர்க்கை முறையில், கோஸ் முதலிய தாவரங்கள் அவதரித்துள்ளன. மண் இல்லாமல், தண்ணீரோடு கலந்த ‌சத்துகளை எடுத்துக் கொள்ளும் ஹைட்ரோபோனிக் முறையில், தாவரங்கள் வளர்கின்றன. இத்தொழில்நுட்பத்தில் இரசாயன உரம் குறைவாகவே தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாது தண்ணீரும் குறைவாக இருந்தாலே போதும். ‌எந்த வகைக் கீரைச் செடிகளையும் வளர்க்க முடியும் என்கின்றனர் பௌரி பண்ணை ஆராய்ச்சியாளர்கள்.
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் ஆரோக்கியமாக வளரும் கீரைகள், அதிவேகமாக வளர்ப்பது எப்படி என்ற‌ ஆராய்ச்சி, பௌரி பண்ணையில் மேற்கொள்ளப்ப‌‌ட்டது. இந்த ஆய்வுப்படி ஆர்பி எல்இடி ஒளி பல்புகளைத் தாவரங்களுக்குப் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்இடி விளக்கில் சிவப்பு மற்றும் நீல நிற ஒளிச்சேர்க்கை மூலம், வெறும் 24 மணி நேரத்தில் கீரையின் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் அதிகரித்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய விவசாயத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தாலும், இந்த புதிய தொழில்நுட்பத்தால் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், தரமான விளைச்சலைத் தர முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.