வெள்ளி, 31 மார்ச், 2017

இருசக்கர வாகனங்களுக்கு ரூ.12,500 வரை தள்ளுபடி

பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.12,500 வரையிலான தள்ளுபடியினை இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-4 கட்டுப்பாட்டு விதிகளை நிறைவு செய்யாத வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படும் என்று வாகன உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பிஎஸ்-3 விதிகளின்படி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மீது தள்ளுபடியினை வாகன உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இருசக்கர வாகன சந்தையில் முதலிடம் வகிக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பிஎஸ்-3 விதியின்படி தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்களுக்கு ரூ.12,500-ம், பிரீமியம் பைக்குகளுக்கு ரூ.7,500 ச்மற்றும் மற்ற இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5,000-ம் தள்ளுபடியினை அறிவித்துள்ளது. அதேபோல இருசக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஹோண்டா நிறுவனம், பிஎஸ்-3 விதிப்படி தயாரிக்கப்பட்ட அனைத்து இருசக்கர வாகனங்களும் ரூ.10,000 தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அறிவிப்பானது மார்ச் 31 அல்லது ஸ்டாக் உள்ளவரை அளிக்கப்படும் என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.