சனி, 25 மார்ச், 2017

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதுத்திட்டம்

நாளுக்கு நாள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகையை அறிவித்துள்ள நிலையில், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் முயற்சியில் ஒரு ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச டேட்டா திட்டம் வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குள் ஜியோ பிரைம் திட்டத்தை அறிவித்துள்ளது. 99 ரூபாய்க்கு ஜியோ ப்ரைம் திட்டத்தில் சேர்வதன் மூலம் பின்வரும் மாதங்களில் அதன் மற்ற சலுகைகளை பெறலாம் என ஜியோ அறிவித்துள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல்-லை பயன்படுத்துவர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். இதனை உணர்ந்துகொண்ட பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களுக்கு, 1ஜிபி இலவச டேட்டாவை வழங்க முடிவு செய்துள்ளது. பிஎஸ்என்எல் மூலம் மொபைல் இணையத்தை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் இந்தச் சலுகை திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. பிஎஸ்என்எல்- சிம் கார்டுகளை வைத்திருந்தும் அதன்மூலம் இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்கு இந்தச் சலுகை திட்டம் பொருந்தும்.
முன்னதாக, ரூ.339-க்கு, 28 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நெட்வொர்க் எண்களுக்குள் அளவில்லாமல் பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2 ஜிபி, 3ஜி டேட்டாவினை பயன்படுத்தலாம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.