டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பயிர் கடன் தள்ளுபடி, தமிழகத்திற்கு கூடுதல் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் 18வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விவசாயிகளைச் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது தமிழக காங்கிரஸ்
தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, கோடீஸ்வரர்களின் கடன்களை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாமல் பாரபட்சம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். விவசாயிகள் போராட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழக மக்களை பிரதமர் மோடி அவமதிப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.