திங்கள், 27 மார்ச், 2017

தமிழகத்தில் கறுப்பு பண டெபாசிட் இவ்ளோ கோடியா?: வருமான வரித்துறை பகீர் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் ரூ.600 கோடி அளவுக்கு கறுப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர், கணக்கில் வராத 246 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த அவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையொன்றில் 246 கோடி ரூபாயை செலுத்தியிருப்பதாக வருமானவரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அந்த நபர் தப்பிக்க முயற்சித்ததாகவும் பின்னர் கணக்கில் வராத பணத்துக்கு 45 சதவிகித வரியை செலுத்த ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது பெயரை அவர்கள் தெரிவிக்கவில்லை.
நவம்பர் 8ஆம் தேதி ரூபாய் மதிப்பிழப்பு குறித்து அறிவிக்கப்பட்டபின், 246 கோடிக்கு பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவர் டெபாசிட் செய்ததாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 200 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் மொத்தம் 600 கோடி ரூபாய் அளவுக்கு இதுவரை கணக்கில் வராத கறுப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ஏறத்தாழ 28ஆயிரம் வங்கிக் கணக்குகள் சந்தேகத்துக்கிடமாக இருப்பதாகவும் வருமானவரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.