திங்கள், 27 மார்ச், 2017

என்னை தாண்டி வாங்க, மத்திய அரசை எதிர்க்கும்..? கலெக்டா்..!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு பகுதியில் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தையால் கடந்த 9ம் தேதி நெடுவாசல், கோட்டைக்காடு போராட்டகாரர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
அதேசமயம் நல்லாண்டார்கொல்லை மற்றும் வடகாட்டில் போராட்டம் தீவிரமடைந்தது. வடகாட்டில் தினமும் பல்வேறு கிராமங்களிலிருந்து மக்கள் வேளாண் விளைபொருட்கள், கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்து போராட்டக்களத்தில் ஒப்பாரி வைத்தும்,
இறுதிசடங்கு செய்தும், 8ம் நாள் சடங்கு மற்றும் மொட்டையடித்தும், ஆடு, மாடுகளுடன் ஊரைக்காலி செய்து அகதிகளாக செல்லும் போராட்டம், நாய், பசு மாட்டிடம் மனு கொடுப்பது போன்ற பல்வேறு வகை நூதன போராட்டங்களை நடத்தினர்.
போராட்டத்தை வேறு விதமாக நடத்த முடிவு செய்து நேற்று முன்தினம் முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். நேற்று முன்தினம்  21வது நாளாக போராட்டம் நடந்தது.
கலெக்டர் கணேஷ் நேற்று முன்தினம் மாலை  போராட்டக் களத்துக்கு வந்தார். சுமார் 30 நிமிடம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கலெக்டரிடம் அவர்கள் அளித்த மனுவில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் 3 மாதத்துக்குள் அகற்றப்பட வேண்டும்.
விவசாயிகளுடனான நில ஒப்பந்தத்தை ரத்து செய்து மறு சீரமைப்பு செய்து சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். காவிரிநீர் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளை 3 மாதங்களுக்குள் நிறைவேற்றுவோம் என மாவட்ட நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இதற்கு, `உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம்’ என்று கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது என்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
கிராமமக்கள் கூறுகையில், இன்று ( 27ம் தேதி) எழுத்துபூர்வமாக கலெக்டர் உறுதி அளிக்காவிட்டால் எங்கள் போராட்டம் நாளை  (28ம் தேதி) முதல் மீண்டும் தொடரும் என தெரிவித்தனர்.
இவ்வாறு நிலைமை இருக்க, மத்திய அரசோ நெடுவாசல் உள்ளிட்ட 28 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஏலம் எடுத்த நிறுவனங்கிளிடம் இன்று புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்கிறது.
நாடு முழுவதும் நிலப்பகுதி மற்றும் கடல்பகுதிக்கு அடியில் இயற்கை வளமான ஹைட்ரோ கார்பன்  இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் ஆய்வில் காஸ் ஹைட்ரேட், தார் உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை வளங்களுக்கான இந்த ஆய்வை ஆயில் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் செய்திருந்தன.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் அவற்றை எடுக்க முடிவு செய்தது.
இதில் 31 ஒப்பந்ததாரர்களுக்கு விடப்பட்ட ஏலத்திற்கான ஒப்பந்தம் டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் நட்சத்திர ஓட்டலில் ,இன்று கையெழுத்தாக உள்ளது.
மத்திய அரசு மற்றும் ஏலம் எடுத்த நிறுவனங்கள் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சிக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை வகிக்கிறார்.
அசாமில் 9, குஜராத்தில் 5, தமிழகத்தில் ஒன்று, புதுச்சேரியில் ஒன்று, ஆந்திராவில் 4, ராஜஸ்தானில் 2, மும்பை கடல் பகுதியில் 6, மத்திய பிரதேசம், கட்ச் கடல் பகுதி , கிருஷ்ணா-கோதாவரி நதிப்படுகை ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 31 இடங்களுக்கு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது.
தமிழக மக்களுக்கு குறிப்பாக புதுக்கோட்டை நெடுவாசல் மக்களுக்கு பச்சைதுரோகம் செய்கிறது. மாவட்ட நிர்வாகமோ 3 மாதத்தில் அனைத்து பிரச்சனையையும் முடித்து தருகிறேன் என்கிறது. என்ன கொடுமை சார் இது.