திங்கள், 27 மார்ச், 2017

இன்று கையெழுத்தாகிறது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தம்!




27/3/2017. நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள போராட்டக் குழுவினர்,  ஒப்பந்தம் கையெழுத்தானால் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். 

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஜெம் லேபராட்டரீஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும், காரைக்கால் பகுதியில் பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் என்ற அரசு நிறுவனத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் குறித்த ஒப்பந்தகள் இன்று கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்தில் டெண்டர் எடுத்துள்ள 22 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த டெண்டர்கள் மூலம் 62 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கும் என்றும், சுமார் 37 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் விருப்பத்தை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று மத்திய அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியின் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட நெடுவாசல் போராட்டக் குழுவினர் இந்த  தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இன்று ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானால் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மட்டுமே கையொப்பம் இடப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். 

மேலும், மக்களின் ஆதரவு இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார். 

எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது என்ற செய்தியை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.