ஞாயிறு, 26 மார்ச், 2017

ரோம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு! March 25, 2017

ரோம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு!


ரோம் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு 60ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளின் தலைவர்களின் மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறுகிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் ஓர் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. இதில் பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன. 
இப்போது நடப்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கு முன்னோடியான ரோம் உடன்படிக்கை கையொப்பமாகி 60ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ரோமில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. 

இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆஸ்திரியப் பிரதமர் கிறிஸ்டியன் கெர்ன், இத்தாலி பிரதமர் பவுலோ கெண்டிலோனி, கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூத், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரெஞ்ச் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

ரோம் உடன்படிக்கையின் அறுபதாம் ஆண்டு விழாவுக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து நின்று படமெடுத்துக் கொண்டனர். அண்மையில் லண்டனில் நாடாளுமன்றம் அருகே தாக்குதல் நடந்ததால், இந்த மாநாட்டையொட்டி ரோம் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.