அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்திருந்தால், அவர் கட்டாயம் பிழைத்திருப்பார் என்று சேலத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் செம்மலை எம்.எல்.ஏ கூறினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை இருப்பதால், நீதி விசாரணை கோரி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சேலத்தில் மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பேசிய அவர், 1966ல் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை அப்போதையை பிரதமர் இந்திராகாந்தி நேரில் சந்தித்தார்.
உடனே அவரை வெளிநாடு சென்றுசிகிச்சை பெற வழி செய்தார். அதுபோலவே, பிரதமர் மோடியும் ஜெயலலிதாவை சந்தித்திருந்தால், அவரை வெளிநாடு கொண்டு சென்றிருப்பார்கள். அவர் உயிர்பிழைத்திருப்பார் என்று செம்மலை கூறினார். எம்ஜிஆரும் கூட உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணா, எம்ஜிஆரை போல ஜெயலலிதாவையும் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது தொண்டர்களும் பொதுமக்களும் நம்புகின்றனர்.
ஆனால், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல கூடாது என்று ஒரு ‘சக்தி’ தடுத்ததாக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
source: kaalaimalar